Published : 18 Jun 2018 08:52 AM
Last Updated : 18 Jun 2018 08:52 AM
நாள்: 15/6/2018. நேரம்: இரவு 7:25.
இடம்: காஷ்மீர் ஸ்ரீநகர், லால் சவுக், ப்ரஸ் என்க்ளேவ் பகுதி. இப்தார் நிகழ்வுக்கு இன்னும் சுமார் 15 நிமிடங்களே இருந்தன. அநேகமாக இன்று இரவுடன் புனித ‘ரம்ஜான்’ நோன்பு முடிகிறது. ‘பிறை’ கண்டவுடன் கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். திடீரென்று வெடிச் சத்தம். இரண்டாம் மாடியில் இருந்த ‘ரைசிங் காஷ்மீர்’ நாளிதழ் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து தெறிக்கின்றன.
‘ஓஹோ.... பிறை தென்பட்டு விட்டது; பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன’ என்று மகிழ்ந்தனர் பணியாளர்கள். ஜன்னல் வழியே கீழே எட்டிப் பார்த்தார் பத்திரிகை யின் அசோசியேட் ஆசிரியர் பைசூல் யாசீன். ஒரு கணம் அதிர்ந்து போனார். தமது பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரியின் கார் கதவின் கண்ணாடி நொறுங்கிச் சிதறி நான்கு பக்கங்களிலும் பரவிக் கிடந்தன.
‘ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது..?’ படிக்கட்டுகளில் இறங்கி ஓடினார். தெருவில் கால் வைத்த கணமே யாசீன் பார்த்து விட்டார் - ‘ரைசிங் காஷ்மீர்’ ஆசிரியர் சுஜாத் புகாரி, எதிரிகளின் குண்டுகளுக்கு வீழ்ந்து, அசையாமல் நிலையாய், ரத்த வெள்ளத்தில் கீழ் நோக்கிக் கிடந்தார்.
இதற்கு முன்பு மூன்று முறை தன் மீது நடந்த தாக்குதல்களில் இருந்து சுஜாத் புகாரி தப்பி இருக்கிறார். ஆனால் இம்முறை...? மிக நெருக்கத்தில் இருந்து 16 குண்டுகள் அவர் உடலில் செலுத்தப்பட்டு இருந்தது. இறந்த நிலையில்தான் கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சட்ட நடைமுறைகளுக்காக புகாரியின் உடல், காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னாலேயே விரைந்தனர் பத்திரிகையின் உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ஊழியர்கள். புகாரியின் சொந்த ஊர் - ஸ்ரீநகரில் இருந்து 41 கி.மீ. தொலைவில் உள்ள பாரமுல்லா மாவட்டம், க்ரீரி நகரம். ஆசிரியரின் உடலை அங்கேயே கொண்டு செல்வதென அவரது குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்தனர்.
மனம் உடைந்த நிலையில் இரண்டாம் நிலை ஆசிரியர் குழுவினர், அலுவலகத்துக்குத் திரும்பினர். அவர்கள் இரண்டு கேள்விகளைத் தங்களுக்குள் எழுப்பிக் கொண்டனர். “இதுபோன்ற நெருக்கடி சமயத்தில், சுஜாத் என்ன செய்து இருப்பார்...? கொலையாளிகளுக்கு நாம் தரும் சரியான பதிலடி என்னவாக இருக்க முடியும்..?” அத்தனை பேருமே தெளிவாக இருந்தார்கள். “கடமை யில் இறங்குவோம். செய்தித்தாளை அச்சுக்குக் கொண்டு வருவோம்.” தீர்மானமான முடிவுக்கு வந்தபோது மணி 9 ஆகி விட்டு இருந்தது. பொதுவாக இரவு 10:30 மணிக்கு அடுத்த நாளுக்கான பத்திரிகை தயாராகிவிடும். இன்று அதற்கு சாத்தியம் இல்லை. வேலை முடிய எப்படியும் விடியற்காலை 1 மணி ஆகி விடும். பரவாயில்லை. ஆக வேண்டிய பணிகளில் மூழ்கினர்.
செய்தி அறிந்து, ‘ஆதரவு’ தெரிவிப்பதற்காக நாளிதழின் அலுவலகத்துக்கு முதல் ஆளாக வந்திருந்தார் முன்னாள் பணியாளர் ஒருவர். அவரே, முதல் பக்கத்தை வடிவமைத்துத் தர முன் வந்தார். கூடுதல் பணியில் எல்லாக் கரங்களும் இணைந்து கொண்டன. துணை ஆசிரியர்களே, செய்தியாளர்களாகவும் மாறினர். பசி, உறக்கம், துக்கம், கவலை.. எல்லாவற்றையும் தனியே ஒதுக்கி வைத்து விட்டு, பத்திரிகைப் பணியில் இறங்கினார்கள்.
புகாரியின் கருப்பு - வெள்ளைப் படம்; அதன் கீழே வாசகம் - “திடீர் என்று எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள்; தங்களின் தொழிற்முறை உறுதி, அதீத துணிச்சலுடன், எங்களை வழி நடத்தும் ஒளியாய் எப்போதும் இருப்பீர்கள். எங்களிடம் இருந்து உங்களைப் பறித்து விட்ட கோழைகளுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம். உண்மையை உரைக்கும் தங்களின் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம் - அது எத்தனை இனிமையற்றதாக இருந்தாலும்.”
விதி விளையாடிய அந்த நாளில், அடுத்த நாளுக்கான செய்திகளை, சுஜாத் புகாரி, ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்தார். அதன்படி, காஷ்மீர் பற்றிய ஐ. நா. சபை அறிக்கைதான், தலைப்புச் செய்தி; ‘ஈத்’ பிறை தொடர்பானது, அடுத்த முக்கிய செய்தி. ஆசிரியர் மீது நடந்த கொலைத் தாக்குதல் குறித்து ஒன்பது கட்டுரைகள்; இதுவும் அல்லாமல், காஷ்மீரில் அமைதி குறித்து, பேச்சுவார்த்தைக்கான அவசியம் குறித்து ஆசிரியர் புகாரி எழுதி முன்பு வெளியான முக்கிய கட்டுரைகளின் மறு பிரசுரம்...
சாதாரணமாக எட்டு பக்கங்களில் வெளிவரும் நாளிதழ், அன்று 16 பக்கங்கள் கொண்டு இருந்தது. அடுத்த நாள், கடைகளில் தவறாமல் வந்து விட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகப் பத்திரிகை அச்சில் ஏற்றப்பட்டது. விடிய விடிய, பசி நோக்காது கண் துஞ்சாது கவலை, துயரங்களையும் பொருட்படுத்தாது, கடமை ஆற்றினர் அத்தனை பேரும். மறுநாள் காலை, குறித்த நேரத்தில் கடைகளை, பொது மக்களைச் சென்று அடைந்தது - ‘ரைசிங் காஷ்மீர்’.
பணியாளர்களின் தீரச் செயலை அறிந்து, முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா சொன்னார் - “சுஜாத் எண்ணியபடியே பணி தொடர வேண்டும். தாள முடியாத சோகத்தின் ஊடேயும், சுஜாத் புகாரியின் சகாக்களால் பத்திரிகையைக் கொண்டு வர முடிந்துள்ளது. இது அவர்களின் தொழிற்முறை நிபுணத்துவத்துக்குச் சான்று மற்றும் மறைந்த தங்களின் தலைவருக்கு சாலப் பொருத்தமான அஞ்சலி’.
‘எழுத்து’ - சிலருக்குப் பொழுதுபோக்கு; சிலருக்கு வடிகால்; ‘ரைசிங் காஷ்மீர்’ செய்தியாளர்கள் குழுவுக்கு, அதுவே உயிர், உணர்வு. “வேள்வியில் இதுபோல் வேள்வி ஒன்றில்லை; தவத்தில் இதுபோற் தவம் பிறிதில்லை” (பாரதியார்).
‘தி இந்து’ ஆங்கிலம்,
தமிழில்:பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT