Published : 08 Nov 2024 01:59 AM
Last Updated : 08 Nov 2024 01:59 AM
தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் மணமாகாத இளைஞர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைப்பேன் என சரத்பவார் கட்சி வேட்பாளர் வாக்குறுதி அளித்துள்ளார்.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மராத்வாடாவின் பீடு மாவட்டம் பர்லி தொகுதியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸை சேர்ந்த
கேபினட் அமைச்சர் தனஞ்செய் முண்டே மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் ராஜேசாகேப் தேஷ்முக் களம் காண்கிறார். இந்நிலையில் பர்லி தொகுதியில் தாம் வெற்றி பெற்றால் இத்தொகுதியில் மணமாகாத இளைஞர்கள் அனைவருக்கும் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்று ராஜேசாகேப் தேஷ்முக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திருமணம் என்று வரும்போது, பர்லியைச் சேர்ந்த பையன்களுக்கு வேலை இருக்கிறதா அல்லது அவர் ஏதாவது தொழில் செய்கிறாரா என்பதை பெண்ணின் பெற்றோர் அறிய விரும்புகிறார்கள். இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்காவிட்டால் அவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும்? இத்தொகுதி அமைச்சர் தனஞ்செய் முண்டே, புதிய தொழிற்சாலைகள் அமைக்காமலும் பிற வேலைவாய்ப்புக்ளை உருவாக்காமலும் ஒதுங்கி இருந்தால், இளைஞர்கள் என்ன செய்வார்கள்? எனவே இத்தொகுதியில் நான் வெற்றி பெற்றால் அனைத்து இளைஞர்களுக்கும் நான் திருமணம் செய்து வைப்பேன், வாழ்வாதாரம் வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) செய்தித் தொடர்பாளர் அங்குஷ் காக்டே கூறுகையில், “மராத்வாடாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் கிட்டத்தட்ட பூஜ்யமாக உள்ளது. இதனால் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஒரு சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது. எனவே இத்தகைய வாக்குறுதி அளிப்பதில் தவறேதும் இல்லை" என்றார்.
அமைச்சர் தனஞ்செய் முண்டே கூறுகையில், "நான் எம்எல்ஏவாக பதவி வகிக்கும் காலத்தில் பர்லி தொகுதியில் சிமென்ட் ஆலை, சோயாபீன் ஆராய்ச்சி மையம், சீதாப்பழ எஸ்டேட் மற்றும் வேளாண் கல்லூரிகள் வந்துள்ளன. தொகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியை நான் உறுதி செய்துள்ளதை மக்கள் அறிவார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT