Published : 07 Nov 2024 02:16 PM
Last Updated : 07 Nov 2024 02:16 PM
புதுடெல்லி: "அரசு வேலைவாய்ப்புக்கான பணிநியமனங்கள் வெளிப்படையானதாகவும், தன்னிச்சை இல்லாததாகவும் இருக்க ஆட்சேர்ப்புக்கான விதிகளை இடையில் மாற்றக்கூடாது" என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பினை வழங்கியது. தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்ஹா, பங்கஜ் மிதல் மற்றும் மனோஷ் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தங்களின் தீர்ப்பில், "பணியிடத்துக்கான ஆட்சேர்ப்பு முறை அதற்கான விளம்பரங்கள் வெளியிடுவதில் தொடங்கி காலி பணியிடங்களை நிரப்புவதில் நிறைவடைகிறது. ஏற்கனவே இருக்கும் விதிகள் அனுமதிக்காத வரை ஆட்சேர்ப்பு தகுதிகளுக்கான விதிகளை பாதியில் மாற்ற முடியாது.
ஒருவேளை விதிகள் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அது தன்னிச்சையானதாக இருக்கக் கூடாது. அது பிரிவு 14 (சமத்துவம்) மற்றும் பிரிவு 16 (அரசு வேலையில் பாகுபாடு காட்டாமை) ஆகியவைகளின் விதிகளுடன் இணைக்கமாக இருக்க வேண்டும்.
பிரிவு 14 மற்றும் 16 களுக்கு உட்பட்டு பதிவுகளுக்கான அளவுகோள்களை வேலை வழங்குபவர் உருவாக்க வேண்டும். வேலைக்கான நியமனத்தை வழங்குபவர், விதிகளுக்கு மாறாக இல்லாதநிலையில், ஆட்சேர்ப்பின் வெவ்வேறு நிலைகளுக்கான விதிகளை வகுத்து வரையறைகளை அமைக்கலாம்.
இத்தகைய விதிகள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு முன்பு அல்லது அந்த நிலையை அடைவதற்கு முன்பாக அமைக்கப்பட வேண்டும். இதனால் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் வியப்படைய மாட்டார்" என்று தெரிவித்துள்ளனர்.
இத்தகைய கொள்கைகள் அரசு வேலைவாய்ப்புகளில் தன்னிச்சையான தன்மையினைத் தவிர்ப்பதுடன், வெளிப்படைத் தன்மையினையும் ஊக்குவிக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT