Published : 07 Nov 2024 04:07 AM
Last Updated : 07 Nov 2024 04:07 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள288 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
மகாயுதியில் பாஜக 153, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 85, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 55, சிறிய கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. எம்விஏவில் காங்கிரஸ் 103, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 93, என்சிபி 86, பிற கட்சிகள் 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் விவசாயிகள்பிரச்சினையும் மராட்டியர்கள் இடஒதுக்கீடும் முன்னிறுத்தப்படு கின்றன.
கடந்த 2019 தேர்தலுக்கு பின் சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் பிளவுபட்டன. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக புகார் உள்ளது. எனவே இந்தப் பிளவு மீதான அனுதாப அலை மகாயுதியை அச்சுறுத்துகிறது. அதேசமயம், சிவசேனாவிலிருந்து பிரிந்த ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் (மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா) கட்சி 150 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இக்கட்சியால் எம்விஏ வாக்குகள் பிரியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனாவின் கோட்டையாக மும்பை கருதப்படுகிறது. கடந்த 2019 தேர்தலில் மும்பையின் 36 தொகுதிகளில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து 30 தொகுதிகளில் வென்றன. தற்போது சிவசேனா பிளவுபட்டதால் உத்தவ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் களம் காண்கின்றன.
இந்தமுறை, மும்பையின் 36 தொகுதிகளில் சிவசேனா (உத்தவ்) 22, காங்கிரஸ் 11, என்சிபி 2, சமாஜ்வாதி 1 தொகுதியில் போட்டியிடுகின்றன. மகாயுதியில் பாஜக 18, ஷிண்டேவின் சிவசேனா 16, அஜித் பவாரின் என்சிபி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இவ்விரு அணியில் எம்விஏவின் வாக்குகளை பிரிக்கும் வகையில்ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ், மும்பையில் 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராஜ் தாக்கரேவின் அரசியல் வாரிசாக அவரதுமகன் அமீத் தாக்கரே முதன் முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார்.
இவர் போட்டியிடும் மாஹிம் தொகுதியில் எம்என்எஸ் கட்சி கடந்த 2004-ல் ஒருமுறை வென்றது. மாஹிமில் சிவசேனா தலைமையகம் அமைந்திருப்பதால் இதை கைப்பற்றுவதில் தாக்கரேக்களுக்கு இடையே போட்டியுள்ளது.
இதுபோல் உத்தவ் தாக்கரேவின்மகன் ஆதித்ய தாக்கரே போட்டியிடும் வொர்லி, கொலை செய்யப்பட்ட பாபா சித்திக்கின் மகன் ஜிஷான் சித்திக் போட்டியிடும் மும்பை கிழக்கு உள்ளிட்ட தொகுதிகள் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. வொர்லியில் மீண்டும் போட்டியிடும் ஆதித்ய தாக்கரேவை தோற்கடிக்க முதல்வர் ஷிண்டே தங்கள்எம்.பி. மிலிந்த் தியோராவை நிறுத்தியுள்ளார். இங்கு ராஜ் தாக்கரே கட்சியும் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மும்பையில் கடந்த 1995 முதல்2005 வரை இருந்த நிழல் உலகதாதாக்கள் சாம்ராஜ்யம் ஒழிக்கப்பட்டு விட்டது. இதனால், தேர்தல்களில் நிழல் உலக தாதாக்கள் தலையீடு மும்பையில் தற்போது இல்லை. மகாயுதி வாக்குகளை மராட்டியர் இடஒதுக்கீடு போராளி மனோஜ் பாட்டீல் பிரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் தனது வேட்பாளர்களை வாபஸ் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT