Published : 07 Nov 2024 03:36 AM
Last Updated : 07 Nov 2024 03:36 AM
இலகுரக மோட்டார் வாகனத்துக்கான (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் 7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வணிகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஒருவர் போக்குவரத்து வாகனங்கள் ஓட்டுவதை 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2017-ல் சாத்தியமாக்கியது. இதற்கு எதிராக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான மனுவில் "எல்எம்வி உரிமம் வைத்துள்ள ஒருவரை பேருந்து, லாரி அல்லது ரோடு ரோலர் ஓட்ட அனுமதிக்கும் முடிவானது குடிமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சுமையை அதிகரிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில் எல்எம்வி ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் ஒருவர் 7,500 கிலோவுக்கு குறைவான எடையுள்ள வணிகப் போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு அளித்துள்து.
இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ல் மட்டும் சாலை விபத்துகளில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ளும்போது சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு தீவிரமான பொதுப் பிரச்சினையாகும். என்றாலும் எல்எம்வி உரிமம் வைத்திருப்போர் வணிகப் போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுவதாக எந்த அனுபவ தரவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை.
உரிம நோக்கத்திற்காக எல்எம்வி மற்றும் போக்குவரத்து வாகனங்களை தனித்தனி பிரிவுகளாக கருத முடியாது. மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கூடுதல் பயிற்சி மற்றும் தகுதி அளவுகோல்கள், 7,500 கிலோவுக்கு மேல் வணிக போக்குவரத்து வாகனங்களை ஓட்ட விரும்புவோருக்கு மட்டுமே பொருந்தும். நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் இதில் அடங்கும்.
கடந்த 2017-ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏழை குடும்பத்து ஓட்டுநர் ஒருவர் போக்குவரத்து வாகனத்தை ஓட்ட அனுமதித்தது. இவர்களின் வாழ்வாதாரம் கருதி சட்டத்திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். விரிவான சட்டத்திருத்தங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் என நம்புகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT