Published : 06 Nov 2024 08:49 PM
Last Updated : 06 Nov 2024 08:49 PM
அமராவதி: ஆந்திர மாநிலத்தின் மருமகன் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி ஏற்க உள்ளார். ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட உஷா சிலுக்கூரியின் கணவரான ஜேடி வான்ஸ் விரைவில் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர். அந்த வகையில் 279 எல்க்டோரல் வாக்குகள் பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனல்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் 223 எல்க்டோரல் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை கண்டார்.
இந்நிலையில், ஜேடி வான்ஸ் என்பவரை தேர்தலுக்கு முன்பே இவர்தான் துணை அதிபர் என டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்து விட்டார். தேர்தல் வெற்றிக்குப் பிறகும் இதை டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார். ஜேடி வான்ஸ் அதிபர் தலைவர் ஆவது உறுதி. பத்திரிக்கையாளரான இவர், சட்டப்படிப்பு படித்து, செனட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா சிலுக்கூரி ஒரு இந்தியர். அதிலும் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது அமெரிக்கா என்றாலும், இவரது மூதாதையர்கள் ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம், உய்யூரு மண்டலம், சாய்புரம் கிராமத்தை சேர்ந்தவர்களாவர். உஷா சிலுக்கூரியின் பெற்றோர்களான ராதா கிருஷ்ணா மற்றும் லட்சுமி ஆகியோர் கடந்த 1980-ல் அமெரிக்காவுக்குச் சென்றனர்.
தாய் லட்சுமி, மூலக்கூறு உயிரியல், உயிர் வேதியியல் துறை நிபுணராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். தந்தை ராதா கிருஷ்ணா ‘கிருஷ் சிலுக்கூரி’ யாக அனைவராலும் அறியப்பட்டவர். இவர், ஏரோ ஸ்பேஸ் பொறியாளராக பணியாற்றியவர். கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டியாகோவில் உஷா சிலுக்கூரி பிறந்தார். இவர், ஏல் பல்கலை கழகத்தில் வரலாறு படிப்பில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் தத்துவயியல் படித்தார். அங்குள்ள உச்ச நீதிமன்றத்தில் உஷா சிலுக்கூரி பணியாற்றினார்.
ஏல் சட்டப்படிப்பு கல்லூரியில்தான் முதன் முதலாக உஷா சிலுக்கூரியை ஜேடி. வான்ஸ் சந்தித்தார். அதன் பின்னர் இவர்களின் நட்பு காதலாக மாறியது. 2014-ல் இவர்களின் திருமணம் கெண்டகியில் இந்து முறைப்படி நடந்துள்ளது. இவர்களுக்கு 3 பிள்ளைகள். கணவரின் வெற்றிக்கு பின்னால் உஷா சிலுக்கூரியின் கடின உழைப்பும் அடங்கி உள்ளது. அரசியலில் அவருக்கு உறுதுணையாக உஷா இருந்தார்.
ஒஹாயோ செனட்டராக தனது கணவர் ஜேடி வான்ஸ் போட்டியிட்டபோது, அவருக்கு ஆதரவாக உஷா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். உஷா சிலுக்கூரி விரைவில் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக உள்ளார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை தரக் கூடிய விஷயம் என ஆந்திராவில் அவர்களின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT