Published : 06 Nov 2024 10:14 AM
Last Updated : 06 Nov 2024 10:14 AM
புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசாக வளர்ந்திருப்பதாகக் கருத்து வெளியாகி உள்ளது. இதை அயோத்தி மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் தன் கருத்தாகக் கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் முடிந்த தீபாவளியில் அயோத்தியின் தீப உற்சவத்தில் இரண்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத் மக்களவை தொகுதி எம்பியான அவ்தேஷ் பிரஸாத் அழைக்கப்படவில்லை.
உ.பி.,யின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியைச் சேர்ந்த அவ்தேஷ் இதற்காக, பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில், உ.பி. முதல்வர் யோகியுடன் அயோத்தியின் துறவிகளையும் மடங்களின் தலைவர்களையும் விமர்சித்திருந்தார்.
இதை கண்டிக்கும் வகையில் அயோத்யாவின் ராம் ஜானகி கோயிலின் தபஸ்வீ மடத்தின் தலைவர் ஜெகத்குரு பரமஹன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமாஜ்வாதி எம்.பி.,யான அவ்தேஷை கண்டித்ததுடன் முதல்வர் யோகிதான் நாட்டின் அடுத்த பிரதமர் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜெகத்குரு பரமஹ்ன்ஸ் தன் அறிக்கையில் கூறியதாவது: அவ்தேஷ் பிரஸாத்தின் கருத்துக்களை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இவர் ஓர் ‘அழுகிய மாம்பழம்’ போல் இருப்பவர். அயோத்தியின் களங்கமாக இருப்பவருக்கு துறவிகளை விமர்சிக்கத் தகுதி இல்லை. உத்தரப் பிரதேசத்தின் திறமைப்படைத்த சிறந்த முதல்வரான யோகி குறித்து பேசவும் அவருக்கு அருகதை இல்லை.
பிரதமர் மோடியின் அரசியல் வாரிசாக வளர்ந்திருப்பவர் முதல்வர் யோகி. பிரதமர் மோடிக்கு பின் அப்பதவியில் முதல்வர் யோகி அமர்த்தப்பட வேண்டும். இந்த கோரிக்கை நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் இடையேயும் கிளம்பி வருகிறது. எனவே, உபியின் முதல்வர் யோகி நம் நாட்டின் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறும் ஜெகத்குரு பரமஹன்ஸ் பிஹாரை சேர்ந்தவர். தனது 17 வயது முதல் அயோத்தியில் துறவியாக வாழும் இவர் சர்ச்சைக்குரியவராகக் கருதப்படுகிறார்.
இந்துத்துவாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை அயோத்யாவில் சாகும்வரை உண்ணாவிரதம் என அமர்ந்தார். இதில் ஒன்றை முதல்வர் யோகி நேரில் வந்து முடித்து வைத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT