Last Updated : 06 Nov, 2024 02:27 AM

 

Published : 06 Nov 2024 02:27 AM
Last Updated : 06 Nov 2024 02:27 AM

வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பல் பிடியில் 3,000 உத்தர பிரதேச இளைஞர்கள் சிக்கித் தவிப்பு: மீட்கும் பணி தீவிரம்

புதுடெல்லி: வெளிநாடுகளில் சைபர் குற்ற கும்பலின் பிடியில் உ.பி.யின் 3.000 இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய அரசின் உதவியுடன் இவர்களை மீட்கும் பணியில் மாநில காவல் துறை இறங்கியுள்ளது.

நாட்டில் சமீப காலமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதில் ’டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற குற்றம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் நடத்தப்படுகிறது. மத்திய, மாநில அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் இதில் குறி வைக்கப்படுகின்றனர். இக்குற்றங்கள் கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியாட்நாமில் இருந்து அதிகம் செய்யப்படுகின்றன. இந்த மூன்று நாடுகளும் சைபர் குற்றங்கள் நிகழும் முக்கிய நாடுகளாக சர்வதேச அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தியாவில் இக்குற்றங்களை செய்ய இந்தி பேசுவோர் அவசியம். இதற்காக உ.பி.யில் படித்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து வந்து சைபர் குற்றங்கள் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். இந்த இளைஞர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் சேகரித்தது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட இந்தப் பட்டியலில் பெரும்பாலானோர் உ.பி.யை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலா, தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக 6 மாத விசாவில் சென்று பல மாதங்களாக நாடு திரும்பாதவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பட்டியலை ஆராய்ந்து, உ.பி. இளைஞர்களை மீட்கும் பணியை சைபர் கிரைம் எஸ்.பி. ராஜேஷ் குமார் யாதவிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்படைத்துள்ளார். இவரது தலைமையில் 5-க்கும் மேற்பட்ட தனிப் படை போலீஸார் உ.பி. இளைஞர்களை மீட்கும் பணியில் களம் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் உ.பி. படைகள் வட்டாரம் கூறுகையில், “உ.பி. மட்டுமின்றி மகராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் இளைஞர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வைத்து அம்மாநில மக்களை ஏமாற்றி வருகின்றனர். வெளிநாட்டு வேலை ஆசை காட்டி இளைஞர்களை அழைத்துச் சென்று அவர்களின் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்து மோசடி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். சைபர் அடிமைகள் என்ற அழைக்கப்படும் இந்த இளைஞர்களுக்கு ஒரு தொகையை அளிப்பதுடன் அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டி உள்ளதால் பிரச்சினை வெளியில் தெரியவில்லை" என்று தெரிவித்தனர்.

இந்த சைபர் அடிமைகளில் 248 பேர் நொய்டாவின் கவுதம்புத் நகரை சேர்ந்தவர்கள். இவர்களில் சில குடும்பங்கள் அளித்த தகவல் நொய்டாவின் ஒரு சம்பவத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சைபர் குற்றத்தில் சீனாவை சேர்ந்த 11 குற்றவாளிகள் சிக்கினர். இவர்கள் விளையாட்டு, தொழில், காப்பீடு ஆகியவற்றில் அதிகப் பணம் சம்பாதிக்கும் ஆசைகாட்டி மோசடி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளனர். இவர்களும் இந்திய இளைஞர்களை அடிமைகளாக்கி பயன்படுத்தி உள்ளனர். இக்கும்பலின் முக்கிய நபர் சீனாவில் இருந்து செயல்படுகிறார். அவருக்கு கீழ் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலும் கும்பல்கள் வேலை செய்வது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x