Published : 04 Nov 2024 11:28 PM
Last Updated : 04 Nov 2024 11:28 PM

“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” - ஆந்திர உள்துறை அமைச்சருக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை

அமராவதி: சட்டம் ஒழுங்கில் முன்னேற்றம் இல்லையென்றால் உள்துறை அமைச்சகத்தை நான் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போல நாம இருக்க வேண்டும். இல்லையென்றால் இங்கு எதுவும் மாறாது என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

காக்கிநாடா மாவட்டம், பிதாபுரம் பகுதியில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், “ஆந்திராவில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது: “உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கிறேன். உங்கள் கடமைகளை சரியாக செய்யுங்கள் அல்லது உள்துறை அமைச்சகத்தையும் நானே எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

நீங்கள் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் வெறும் ஓட்டு கேட்க மட்டுமே அல்ல. உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. அனைவரும் யோசிக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்தை யாரும் எதுவும் கேட்கமுடியாது என்றெல்லாம் கிடையாது. நான் செய்தால், நாம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கு எதுவும் மாறாது. எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்தார்.

பவன் கல்யாணின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மற்றொரு மூத்த அமைச்சரான பி.நாராயணன் “துணை முதல்வர் என்ற முறையில், தவறுகளைச் சுட்டிக்காட்டவும், அமைச்சர்களை சரியான பாதையில் கொண்டு செல்லவும் பவன் கல்யாணுக்கு உரிமை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x