Published : 04 Nov 2024 06:14 PM
Last Updated : 04 Nov 2024 06:14 PM

வயநாடு நிலச்சரிவு பேரழிவைக் கூட பாஜக ‘அரசியல்’ ஆக்கியதாக பிரியங்கா காந்தி சாடல்!

வயநாடு: அதிகாரத்தில் இருக்க விரும்புபவர்களாலேயே நாட்டில் வெறுப்பும் கோபமும் பரப்பப்படுகிறது என்று வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி வதேரா தெரிவித்தார். மேலும், மக்களுக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்கியது என்று அவர் சாடினார்.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வதேரா இன்று தொகுதியின் புல்பள்ளி, கெனிச்சிரா, படிச்சிரா, முட்டில் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அவர்களின் பணியிடங்களுக்குச் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

தேர்தல் பிரசாரங்களில் பிரியங்கா காந்தி வதேரா பேசியது: “ராகுல் காந்தியும் நானும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ பயங்கரமான மற்றும் வேதனையான சம்பவங்களை பார்த்திருக்கிறோம். இருப்பினும், வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு எங்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது. மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்திய ஒரு பேரழிவைக் கூட பாஜக அரசியலாக்க தவறவில்லை. வயநாடு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு போதுமான உதவிகளை வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் உங்களுக்காக உறுதியான குரலை எழுப்புவேன்.

எனது மகளின் வயதுடைய ஒரு பெண்ணையும், முழு குடும்பத்தையும் இழந்த ஒரு பாட்டியையும், தனது நண்பர்கள் அனைவரையும் இழந்த 13 வயது சிறுவனனையும் நான் சந்தித்தேன். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்ததை பார்த்து நானும் ராகுலும் வியந்தோம். யார் எந்த மதம் என்று யாரும் கேட்கவில்லை. எல்லோரும் தங்களால் முடிந்ததைச் செய்தார்கள். ஒரு சமூகம் ஒன்று சேர்ந்தால் என்ன சாதிக்க முடியும் என்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் ஒற்றுமை உணர்வு ஒரு பிரகாசமான உதாரணம்; ஒவ்வொரு இந்தியரின் பெருமை. மிக முக்கியமாக, நீங்கள் இந்தியாவின் ஒற்றுமைக்கு ஒரு பிரகாசமான உதாரணம்.

இங்கு அழகான கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளன. அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ்கின்றனர். அதிகாரத்தில் இருக்க விரும்புபவர்களால் பரப்பப்படும் வெறுப்பும் கோபமும், நாடு முழுவதும் சூழப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த குணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இருப்பினும், இந்த தேசம் உண்மையில் எதற்காக நிற்கிறது என்பதற்கு நீங்கள் உதாரணமாக இருக்கிறீர்கள். இத்தகைய சிறந்த மனிதர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

நான் வயநாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்றபோது, ​​நீங்கள் தினமும் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களை அறிந்தேன். விலைவாசி உயர்வு, வேலையின்மை, பயனளிக்காத அரசாங்கக் கொள்கைகள், இவை அனைத்தும் உங்கள் வளர்ச்சியைத் தடுக்கின்றன. பணவீக்கம் காரணமாக உங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பது சவாலாக உள்ளது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடும் உள்ளது. அனைத்து வகையான சுற்றுலாவையும் மேம்படுத்த, வயநாட்டின் அழகை உலகுக்குக் காட்ட உங்களுக்கு வலுவான உள்கட்டமைப்பு தேவை.

மருத்துவக் கல்லூரி, மனித - விலங்கு மோதல், இரவு போக்குவரத்து போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வயநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை நமக்குத் தேவை. நீங்கள் உற்பத்தி செய்யும் பயிர்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு சரியான சந்தைப்படுத்தல் உத்திகள் தேவை. தற்போதுள்ள வளங்களை வலுப்படுத்தி, வயநாட்டின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்த வேண்டும்.

வயநாட்டில் உள்ள பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ளவும், நீடித்த தீர்வுக்கான வலுவான திட்டத்தை உருவாக்கவும் நான் இலக்கு வைத்துள்ளேன். உங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று பிரியங்கா காந்தி வதேரா பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x