Published : 04 Nov 2024 05:44 PM
Last Updated : 04 Nov 2024 05:44 PM
புதுடெல்லி: பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நவம்பர் 20-ம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 9, பஞ்சாபில் 4, கேரளாவில் 1 என மொத்தம் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 20-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், “கேரளாவின் கல்பாத்தியில் நவம்பர் 13-15-ல் ரத உற்சவம் நடைபெறுகிறது. இதுபோல் நவம்பர் 15-ல் கார்திகை பவுர்ணமி, குருநானக் ஜெயந்தி கொண்டாப்படுகிறது. வாக்குப் பதிவில் இந்த விழாக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் கட்சிகள் கூறின. எனவே அவற்றின் கோரிக்கையை ஏற்று தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் 15 மாநிலங்களில் மொத்தம் 48 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில காவல்துறை இயக்குநர் ராஷ்மி சுக்லா பாரபட்சமாக நடந்துகொள்ளவதாகவும், எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும், அவரை மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, டிஜிபி ராஷ்மி சுக்லாவின் பொறுப்பை மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு மாநில தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்த நிலைகளில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT