Published : 04 Nov 2024 03:41 PM
Last Updated : 04 Nov 2024 03:41 PM
புதுடெல்லி: உத்தராகண்டின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து, அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ.4) காலை நடந்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 60 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தை அடுத்து காவல்துறை, SDRF மற்றும் NDRF வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயமடைந்த பலரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் சந்தீப், இன்னும் ஒருவர் விரைவில் வந்து சேருவார் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அல்மோரா மாவட்டத்தில் உள்ள மார்ச்சுலாவில் நடந்த இதயத்தை உலுக்கும் பேருந்து விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரமான இந்த நேரத்தில் நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்கள் சிறந்த சிகிச்சைக்காக ரிஷிகேஷ் எய்ம்ஸ் மற்றும் ஹல்த்வானியில் உள்ள சுஷிலா திவாரி மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்வதற்காக இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு டெல்லியிலிருந்து நான் பந்த்நகர் செல்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் நடந்த சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல். மேலும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளாட்சி நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT