Published : 04 Nov 2024 03:07 PM
Last Updated : 04 Nov 2024 03:07 PM
கார்வா: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் வங்கதேச ஊடுருவல்காரர்களின் ஆதரவாளர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்முறையாக அம்மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கார்வா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், “ஜார்க்கண்டின் நலன், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கான உத்தரவாதத்துடன் பாஜக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. நேற்று ஜார்க்கண்ட் பாஜக, மிக அற்புதமான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை, ஜார்க்கண்ட்டின், நிலம், மகள்கள், உணவு ஆகியவற்றுக்கான மரியாதை, பாதுகாப்பு மற்றும் செழுமைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,100 வழங்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களின் தாய் மற்றும் சகோதரிகளுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டன. இப்போது ஜார்க்கண்டில் அமைக்கப் போகும் பாஜக அரசு ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்கும், இதனுடன் அடுத்த ஆண்டு தீபாவளி மற்றும் ரக்ஷாபந்தன் பண்டிகைக்காக இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். .
ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக நாங்கள் முழு முயற்சியையும் நேர்மையாக மேற்கொண்டு வருகிறோம். நீங்கள் இங்கு இரட்டை இயந்திர ஆட்சியை அமைக்கும் போது, மாநிலத்தின் வளர்ச்சியும் இரட்டிப்பு வேகத்தில் நடக்கத் தொடங்கும்.
ஜார்க்கண்ட் இளைஞர்களிடையே திறமைக்கு பஞ்சமில்லை. நமது ஜார்கண்டின் இந்த மகன்கள் மற்றும் மகள்கள் விளையாட்டுத் துறையில் ஜார்கண்டின் உணர்வைக் காட்டுகிறார்கள். ஜார்க்கண்ட் இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி ஆகியவை ஜார்க்கண்ட் இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. அவர்கள் ஜார்க்கண்ட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அரசு பணி நியமனத்தில் முறைகேடு, வினாத்தாள் கசிவு ஆகியவை இங்கு ஒரு தொழிலாகிவிட்டது. கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பின் போது ஜேஎம்எம் அரசாங்கத்தின் அலட்சியத்தால், பல இளைஞர்கள் பரிதாபமாக இறந்தனர். இப்போது இந்த நிலையை மாற்ற ஜார்க்கண்ட் பாஜக முடிவு செய்துள்ளது. மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, சுமார் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் வெளிப்படையான முறையில் நிரப்பப்படும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் அரசியலின் முக்கிய அடிப்படை பொதுமக்களிடம் பொய் சொல்வதும், பொதுமக்களை ஏமாற்றுவதும்தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்கள் வாக்காளர்களை ஏமாற்றி வருகின்றனர். நமது மக்களின் கண்களில் மண்ணை தூவுகிறார்கள். சமீபத்தில் ஹரியானா இவர்களுக்கு பாடம் புகட்டியது. எங்கெல்லாம் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்ததோ, அந்த மாநிலத்தை அவர்கள் நாசமாக்கிவிட்டார்கள்.
காங்கிரஸ் பொய்யான உத்தரவாதம் தருவதை அக்கட்சியின் தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார். மல்லிகார்ஜுன் கார்கேஜியின் வாயிலிருந்து தெரிந்தோ தெரியாமலோ உண்மை வெளிப்பட்டுவிட்டது. காங்கிரஸின் இந்த அபத்தமான அறிவிப்புகள் மாநிலங்களை திவாலாக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஜார்கண்டிற்கு இருக்கும் மற்றொரு பெரிய எதிரி, குடும்ப ஆட்சிதான். ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி ஆகிய மூன்று கட்சிகளும் தீவிரமாக குடும்ப அரசியல் செய்பவர்கள். அதிகாரத்திற்கான திறவுகோல்கள் தங்கள் குடும்பத்திடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இதுபோன்ற சுயநலக் கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.
ஊழல் நாட்டை கரையான் போல் அழிக்கிறது. ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினரை ஊழல் கடுமையாக பாதிக்கிறது. ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி அரசு எப்படி ஊழல் செய்தது என்பதை ஜார்க்கண்ட் கடந்த 5 ஆண்டுகளில் பார்த்தது. முதலமைச்சராகட்டும், அமைச்சராகட்டும், எம்எல்ஏவாகட்டும், எம்பியாகட்டும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாதவர்கள் யாரும் இல்லை. மத்திய அரசு அனுப்பிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணியின் ஊழல் தலைவர்கள் தின்று வருகின்றனர்.
ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி மூன்றும் (முஸ்லிம்களை) திருப்திப்படுத்தும் கொள்கையை அதன் உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சமூக கட்டமைப்பை உடைக்கும் நோக்கத்தில் உள்ளன. மூன்று கட்சிகளும் ஊடுருவல்களின் ஆதரவாளர்கள். வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் வாக்குகளைப் பெற, இவர்கள் இந்த ஊடுருவல்காரர்களை ஜார்க்கண்ட் முழுவதும் குடியமர்த்துகிறார்கள். சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்றால் அதுவே இவர்களை புரிந்து கொள்ள போதுமானது.
அவர்கள் உங்கள் உணவை, உங்கள் மகள்களை, உங்கள் மண்ணை பறிக்கிறார்கள். ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடியின் இந்த வியூகம் தொடர்ந்தால், ஜார்க்கண்டில் பழங்குடி சமூகம் சுருங்கிவிடும். பழங்குடி சமூகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே இந்த ஊடுருவல் கூட்டணியை ஒரு வாக்கு மூலம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT