Published : 26 Jun 2018 07:11 AM
Last Updated : 26 Jun 2018 07:11 AM

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1,200 வகை ஆபரணங்கள் 1 மணி நேரத்தில் பரிசீலனை: நகைகள் பாதுகாப்பாக உள்ளதாக தேவஸ்தான குழு அறிவிப்பு

முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று மாலை, திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான சுமார் 1,200 வகையான நகைகளை 1 மணி நேரத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள் பரிசீலித்தனர். பின்னர், அனைத்து ஆபரணங்களும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர்கள் அளித்த நகைகள் மாயமாகி உள்ளதாகவும், இவை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு விட்டதாகவும் முன்னாள் பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதர் குற்றம் சாட்டினார். இதனை தேவஸ்தான அதிகாரிகள் மறுத்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை, திருமலையில் கற்ப கிரகத்தின் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள, ஏழுமலையானுக்கு தினமும் உபயோகப்படுத்தும் நகைகளை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆகம சாஸ்திர வல்லுனர்கள், அர்ச்சகர்கள் பரிசீலித்தனர்.

திருப்பதி ஏழுமலையானுக்கு 1,200 வகையான நகைகள் உள்ளன. நேற்று, பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்த நகைகள் வெளியே கொண்டு வரப்பட்டன. இவைகளை திருவாபரண பதிவேட்டின்படி பரிசீலித்தனர். பின்னர் வெளியே வந்த அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கட வீராய்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழுமலையானின் நகைகள் அனைத்தையும் நாங்கள் பரிசீலித்தோம். அனைத்தும் சரியாக உள்ளது. ரமண தீட்சிதரின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. நகைகள் காணாமல் போயிருந்தால், இதுகுறித்து அவர் பணியில் இருந்தபோதே கூறியிருக்கலாம் அல்லவா ? பணி நீக்கம் செய்த பின்னர் கூறுவது ஏன்? ஏழுமலையானின் கோயிலில் இருந்து ஒரு குண்டூசியை கூட யாரும் வெளியே எடுத்து செல்ல இயலாது. பக்தர்கள் வீண் புரளியை நம்ப வேண்டாம். இவ்வாறு வெங்கட வீரய்யா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x