Published : 04 Nov 2024 02:48 AM
Last Updated : 04 Nov 2024 02:48 AM
கோட்டயம்: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் வி.என்.வாசவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள அமைச்சர் வாசவன் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் இலவச காப்பீடு அளிக்கப்படும். ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டால் இந்த தொகையை திருவாங்கூர்தேவஸ்வம் போர்டு வழங்கும். அத்துடன், உயிரிழப்பவரின்
உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளையும் தேவஸ்வம் போர்டு செய்து கொடுக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது பக்தர்களின் யாத்திரைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கோயில் முழுவதும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்வதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசுதா சேனா உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 13,600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களில் சபரிமலையில் ஏற்கெனவே பணியாற்றி அனுபவம் பெற்றவர்களும் அடங்குவர்.
இந்த முறை தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 2,500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். அவசர காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கபுதிய வாக்கி டாக்கி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். மேலும், புனித நீராடும் செங்கனூர், எருமேலி, பம்பா போன்ற நதிக்கரைகளில் பாதுகாப்பு வேலி அமைக் கப்படும். தவிர மருத்துவ வசதி கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்து வர்கள் தயாராக உள்ளனர். வாகனங்களை ஒழுங்குபடுத்தி ரோந்துப் பணிகளில் ஈடுபட 20-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீர் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனியில் இருந்து பம்பை வர கேரள போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கும்.
பக்தர்கள் ஆங்காங்கே ஓய்வெடுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்டஸ்டீல் இருக்கைகள் அமைக்கப்படும். கழிவறை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வழங்க 40 லட்சத்துக்கும் மேற்பட்ட டின்களில் அரவணை பிரசாதம் தயார் நிலையில் வைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் வாசவன் தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிச.26-ம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT