Published : 04 Nov 2024 02:25 AM
Last Updated : 04 Nov 2024 02:25 AM

ஏழுமலையான் பக்தர்களுக்காக ஒருநாள் அன்ன பிரசாதம் வழங்க ரூ.44 லட்சம் நிர்ணயம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அரசர் காலம் முதலே பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது. மடம் சார்ந்த நிர்வாகிகள், கோயில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு தினமும் திருமலையில் அன்னதானம் செய்து வந்தனர். அதன் பின்னர், திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்டதும், என்.டி.ராமாராவ் ஆட்சியில் கடந்த 1983-ம்ஆண்டு முதல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான திட்டம் அதிகார பூர்வமாக செய்ய முடிவு செய்யப்பட்டது. அதாவது, பக்தர்கள் சுவாமி உண்டியலில் செலுத்தும் காணிக்கையை அரசு சார்ந்த வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டி பணத்தில் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் செய்வது என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதான திட்டம் என்.டி.ஆர் மூலமாக தொடங்கப்பட்டது. அவரது ஆட்சி காலத்தில் தான் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸும் கட்டப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக பக்தர்களுக்கு வழங்கும் அன்னதானம் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 2.5 லட்சம் பக்தர்களுக்கு திருமலை மற்றும் திருப்பதி, திருச்சானூரில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதில் நன்கொடை கொடுத்து பக்தர்களும் அன்னதான திட்டத்தில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பல பக்தர்கள் பங்கேற்று நன்கொடை அளித்தனர். தற்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னபிரசாத திட்டத்திற்கு புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.44 லட்சம் நன்கொடையாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை சிற்றுண்டிக்கு ரூ.10 லட்சம் எனவும், மதிய உணவிற்கு ரூ. 17 லட்சமாகவும், இரவு உணவுக்கு ரூ. 17 லட்சமாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க நினைக்கும் பக்தர்கள், நாள் முழுவதும் அன்னதானம் செய்ய ரூ. 44 லட்சமும் வழங்கலாம். அல்லது காலை, மதியம், அல்லது இரவு உணவுக்கென தனித்தனியாகவும் நன்கொடை வழங்கலாம். அப்படி வழங்கிடும் நன்கொடையாளர்களின் பெயர்கள் அன்னதான மையகூடத்தில் டிஜிட்டலில் தெரியப்படுத்தப்படும். மேலும் நன்கொடையாளர்களே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம்.

திருமலையில் மாத்ரு ஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பாள் கூடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ், பழைய அன்ன பிரசாத கூடம் மற்றும் கோயிலுக்கு வெளியே நிற்கும் பக்தர்கள், மாற்று திறனாளி பக்தர்கள், மூத்த குடிமகன்களுக்கான கூடம், ரூ.300 சிறப்பு தரிசனகாம்ப்ளக்ஸ், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதிகளில் அன்னதானம் தினமும் செய்யப்படுகிறது. இது தவிர, திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனை, சிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனை, எஸ்.வி.தாய்-சேய் தேவஸ்தான மருத்துவமனை, எஸ்.வி. ஆயுர்வேத மருத்துவமனைகளில் கூட தினமும் தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தினமும் 2.5 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x