Published : 04 Nov 2024 02:08 AM
Last Updated : 04 Nov 2024 02:08 AM
நாய்களுக்கு பிஸ்கெட்டுகளை போட்டு அதனை குரைக்கவிடாமல் தடுத்து லஷ்கர்-இ-தொய்பா தளபதி உஸ்மானை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இதுகுறித்து பாதுகாப்பு படை உயரதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான உஸ்மான் ஸ்ரீநகரில் உள்ள கன்யார் பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசியமான உளவுத் தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மக்கள் மிக நெருக்கமாக வசிக்கும் பகுதியாகும். இதனால், அங்கு தேடுதல் வேட்டை மேற்கொள்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. சேதத்தை குறைத்து அதேநேரம் வெற்றியினை பதிவு செய்வதற்கு துல்லியமான ஒன்பது மணி நேரம் திட்டமிடல் அவசியமாக இருந்தது.
இருப்பினும், அந்த குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு நாய்கள்தான் இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பெரும் சவாலாக விளங்கியது. ஏனெனில் அசாதாரணமான ஆள்நடமாட்டத்தை கண்டு நாய்கள் குரைத்தால் அதனால் தீவிரவாதிகள் உஷாராகி எளிதாக தப்பிச் செல்வதற்கு வழிவகுத்துவிடும். எனவே. இந்த சிக்கலை எதிர்கொள்ள நாய்கள் உள்ள பகுதியை நெருங்கும்போது அவற்றை சமாதானப்படுத்த தேடுதல் குழுவினர் கையில் பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் சென்றனர்.
நாய்களை பார்க்கும்போது பிஸ்கெட்டுகளை வீசி அவற்றை குரைக்க விடாமல் தடுத்தனர். சுமார் 30 நிமிடங்கள் உஸ்மான் வீட்டை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் மீது ஏகே-47, கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இருதப்புக்கும் இடையே நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் இறுதியில் உஸ்மான் சுட்டுக்கொல்லப்பட்டார். 4 பாதுகாப்பு படையினர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த என்கவுன்ட்டர் நடவடிக்கை முழுவதுமே காலை தொழுகைக்கு முன்னதாகவே செய்து முடிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT