Published : 03 Nov 2024 10:36 PM
Last Updated : 03 Nov 2024 10:36 PM

“வக்பு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி” - திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு விமர்சனம்

பி.ஆர்.நாயுடு

திருப்பதி: வக்பு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி என்று திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு விமர்சித்துள்ளார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஒவைசி, “24 உறுப்பினர்கள் கொண்ட திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் ஒரு இந்து அல்லாதோர் கூட இல்லை. அதன் புதிய தலைவர், தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் வக்பு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் அல்லாத நபர்கள் இருக்க வேண்டும் என்று மோடி அரசு விரும்புகிறது” என்று கூறியிருந்தார்.

ஒவைசியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “வக்பு வாரியம் என்பது ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. ஒவைசி போன்ற ஒரு மூத்த அரசியல்வாதி அதனை எப்படி தேவஸ்தானத்துடன் ஒப்பிடலாம்? அவரது இந்த கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் (டிடிடி) அறங்காவலர் குழு தலைவராக பி.ஆர்.நாயுடு அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். மேலும், டிடிடி குழு உறுப்பினர்களாக 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருமலை தேவஸ்தானத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை வேறு அரசு பணிக்கு மாற்றுவதா அல்லது கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதா என்பது குறித்து மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்று பி.ஆர்.நாயுடு கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x