Last Updated : 03 Nov, 2024 06:07 PM

1  

Published : 03 Nov 2024 06:07 PM
Last Updated : 03 Nov 2024 06:07 PM

டெல்லியில் ஊழலை ஒழிக்க புதிய திட்டம்: சொத்துகளை எந்த நிலப்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம்!

கோப்புப் படம்

புதுடெல்லி: பொதுமக்கள் சொத்துகளை எந்த நிலப்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு செய்யலாம் என்ற திட்டம் அமலாக உள்ளது. ஊழலை ஒழிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இத்திட்டம் பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் நிலங்கள் மற்றும் சொத்துகளை வாங்கவும், விற்கவும் சப்-ரிஜிஸ்டர் ஆலுவலகங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதற்காக நீளும் வரிசையால் பல மணி நேரம் வீணாவதுடன் அங்குள்ள லஞ்சம் ஊழலையும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதே நிலை, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தொடர்கிறது. இதை தடுக்கும் முயற்சியில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு ஒரு புதிய திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, தம் சொத்துகளை வாங்கவும், விற்கவும் பொதுமக்கள், டெல்லியில் எந்த நிலப்பதிவாளர் அலுவலகங்களிலும் பதிவு செய்யலாம். டெல்லியில் மொத்தம் 22 நிலப்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.இவற்றுக்கு இனி பொதுமக்கள் நேரில் செல்லத் தேவையில்லை. தங்கள் சொத்துகளை வாங்கும், விற்கும் பணியின் பெரும்பாலானவற்றை இணையதளம் மூலமாகவே முடித்துக் கொள்ளலாம்.

இணையதளத்தில் தேவையான கோப்புகளை பொதுமக்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றை சம்பந்தப்பட்ட பகுதியின் அலுவலகம் சரிபார்த்து அதற்கு அனுமதி அளிக்கும். பிறகு இவற்றுக்கு தங்கள் உகந்த தேதி, நேரம் குறித்தபின் எந்த அலுவலகத்திற்கும் நேரில் சென்று மீதம் உள்ள பணியை முடிக்கும் வசதியும் செய்யப்பட உள்ளது.

இது குறித்து டெல்லியின் முதல்வர் அதிஷி கூறும்போது, ‘பல்வேறு தரப்பினரின் புகார்களின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அமலாக உள்ளன. இதன் பலவற்றில் நீண்ட வரிசையும், சிலவற்றில் குறைந்த கூட்டமும் காணப்படுகின்றன. இதனால், அதிகக் கூட்டம் உள்ள அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலமாக லஞ்சம், ஊழல் பெருகுகிறது. இதை தடுக்கவே இந்த புதிய திட்டம் அமலாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிலப்பதிவாளர் அலுவலகங்களின் வருமானம் டெல்லி அரசின் நிதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. டெல்லி அரசின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, 22 அலுவலகங்களிலும் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,000 பதிவுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் பல வற்றில் 200 வரையும், சிலவற்றில் வெறும் 50 சொத்துகளும் பதிவாகின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டில் அனைத்து அலுவலகங்களிலும் சேர்த்து மொத்தம் 1.25 லட்சம் சொத்துகள் பதிவாகி இருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x