Published : 02 Nov 2024 06:17 PM
Last Updated : 02 Nov 2024 06:17 PM
புதுடெல்லி: அடுத்த ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர் மற்றும் மின்சாரத்துக்கான உயர்த்தப்பட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.
டெல்லி டிரான்ஸ்போர்ட் நகரில் விஸ்வகர்மா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "மற்ற கட்சி தலைவர்களைப் போல் நான் அரசியல்வாதி இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் வளர்ச்சிக்காக உழைத்தேன். நாட்டின் கல்வி நிறுவனத்தில் படித்தவன் நான், அதனால் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நான் சிறையில் இருந்தபோது, துணைநிலை ஆளுநர்தான் ஆட்சியை நடத்தினார். அப்போது, தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. ஆனால் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். இப்போது நான் வெளியே வந்துவிட்டேன். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
டெல்லியில் கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு இலவச பேருந்துகள் என அனைத்து வகையான வளர்ச்சியையும் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கம் ஏற்படுத்தி இருக்கிறது. உழைத்தவர்களுக்கு வாக்களியுங்கள். ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நான் கூறவில்லை. உங்கள் பிள்ளைகளுக்காக என்ன செய்தார்கள் என்று பாஜகவிடம் கேளுங்கள். டெல்லி மக்களுக்காக அவர்கள் செய்த ஒரு வேலையையாவது அவர்களால் காட்ட முடியுமா" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT