Published : 02 Nov 2024 03:57 AM
Last Updated : 02 Nov 2024 03:57 AM

4 ஆண்டுகளுக்கு பிறகு எல்லையில் ரோந்து பணி: இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் தீபாவளி இனிப்பு பரிமாற்றம்

தீபாவளியை முன்னிட்டு காரகோரம் கணவாய் பகுதி அருகேயுள்ள எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.படம்: ஏஎப்பி

புதுடெல்லி: இந்தியா - சீனா எல்லையில் படைகளை இரு தரப்பும் விலக்கிக் கொண்டுள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல ரோந்து பணி தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு 5 இடங்களில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவம் இடையே இரு நாட்டு எல்லை தொடர்பாக கடந்த 2020 மே, ஜூன் மாதங்களில் மோதல் ஏற்பட்டது. ஜூன் 15-ம் தேதி நடந்த கடும் சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டதால், பதற்றம் அதிகரித்தது. லடாக்கின் தேப்சாங், டாம்சோக் பகுதிகளில் ரோந்து பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இந்தியா - சீனா இடையே கடந்த பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக, எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இரு நாடுகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கடந்த அக்டோபர் 21-ம் தேதி கூறினார். பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு இந்த அறிவிப்பு வெளியானது.

தேப்சாங், டாம்சோக் பகுதிகளில் இருந்து படைகள் மற்றும் உள்கட்டமைப்பை அகற்றுவதற்கும், 2020 ஏப்ரலுக்கு முந்தைய நிலைக்கு படைகள் திரும்பவும் இரு நாட்டு ராணுவமும் ஒப்புக்கொண்ட நிலையில், தங்கள் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இரு நாடுகளும் கடந்த 22-ம் தேதி தொடங்கின. இதன்
மூலம், கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் இந்திய வீரர்கள் எதுவரை சென்றனரோ அதுவரை மீண்டும் சென்று ரோந்து பணியில் ஈடுபட முடியும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்திய ராணுவஅதிகாரிகள் கூறியபோது, ‘‘உடன்பாட்டின்படி, சீனா படைகளை விலக்கிக் கொண்டுள்ளதா என இந்தியா சோதித்து பார்க்க முடியும். இரு தரப்பிலும் தவறான தகவல் தொடர்பை தவிர்க்கும் வகையில், ரோந்து பணிக்கு முன்பு கமாண்டர்கள் பரஸ்பரம் தகவல்
தெரிவிக்க வேண்டும்’’ என்றனர்.

படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 30-ம் தேதி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு, தேப்சாங், டாம்சோக் பகுதிகளில் இரு நாட்டு ராணுவமும் 31-ம் தேதி ரோந்து பணிகளை தொடங்கின. அன்றைய தினம் தீபாவளி பண்டிகை என்பதால், எல்லையில் ரோந்து செல்லும் இந்திய,சீன வீரர்கள் 5 இடங்களில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். லடாக்கில் சுஷுல் மால்டோ, தவுலத் பெக் ஓல்டி, அருணாச்சல பிரதேசத்தில் கிபுது அருகே பன்ச்சா, பும்லா, சிக்கிம் மாநிலத்தில் நாதுலா ஆகிய இடங்களில் வீரர்கள் இனிப்பு பரிமாறிக் கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று முன்தினம் தேசிய ஒற்றுமை தின விழாவில் பேசும்போது, ‘‘படை விலக்கலுக்கு அப்பாலும் செல்ல இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கு சிறிது காலம் எடுக்கும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x