Published : 01 Nov 2024 02:06 PM
Last Updated : 01 Nov 2024 02:06 PM
புதுடெல்லி: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நன்றி தெரிவித்துள்ளது.
ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்களிடம் பேசிய விஹெச்பி தேசிய செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சால், "டொனால்ட் டிரம்பின் கருத்துகளை நான் வரவேற்கிறேன். வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கண்டித்த ஒரு உலகத் தலைவராக அமெரிக்கத் தலைவராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். வங்கதேசத்தில் நடப்பது அபாயகரமானது, அது நடக்கக்கூடாது, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதை அவர் உறக்கக் கூறி இருக்கிறார்.
அவர் எப்போதும் சிறுபான்மையினருக்காக குரல் எழுப்பி வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, மற்ற உலகத் தலைவர்களுக்கு என்ன நேர்ந்தது? இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து அவர்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? இந்துக்கள் தாக்கப்படும்போது, மற்ற உலகத் தலைவர்கள் மவுனம் காப்பது ஒரு விசித்திரமான கேலிக்கூத்து. இந்துக்களுக்கு எதிரான அடக்குமுறை, அடக்குமுறையாகவே கருதப்படுவதில்லை. அது போன்ற செய்திகளும் மறைக்கப்பட்டுள்ளன. ஐநா பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் இது தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவிக்க முன்வர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக வினோத் பன்சால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இஸ்லாமிய ஜிஹாதி சக்திகளின் கரங்களால் பந்தாடப்படும் வங்கதேசத்தின் ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் குரலை உயர்த்தியதற்காக டொனால்ட் டிரம்ப்புக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். போராட்டம் என்ற பெயரில் அராஜகவாதிகள் முதலில் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச தலைமை நீதிபதி, சிறுபான்மையினர் ஆகியோரை வெளியேற்றினார்கள். தற்போது அந்நாட்டின் அதிபரை அவர்கள் குறிவைக்கிறார்கள்.
இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையினர் இனப்படுகொலை செய்யப்படுவதைப் பற்றி மற்ற உலகத் தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஏன் வாய் திறக்கவில்லை? ஐநா மனித உரிமை ஆணையம் எங்கே போனது?
வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற ஜிகாதி படைகளால் கைப்பற்றப்பட்ட சில நாடுகளில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வது மட்டுமல்லாது, அதை வெளியே சொல்லவும் முடியாத நிலையில் இருப்பவர்கள் உலகில் இந்துக்கள் மட்டுமே. வங்கதேசத்தில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை அங்கீகரித்த ஒரே மேற்கத்திய தலைவர் நீங்கள்தான்" என குறிப்பிட்டிருந்தார்.
தீபாவளியை முன்னிட்டு அமெரிக்காவின் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இந்துக்களுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அவர், “வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அங்கு இன்னமும் குழப்பமான நிலையே நீடிக்கிறது.
நான் அதிபராக இருந்திருந்தால் இதுபோல் ஒருபோதும் நடந்திருக்காது. உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும் உள்ள இந்துக்களை கமலா ஹாரிசும், ஜோ பிடனும் புறக்கணித்துவிட்டார்கள். இஸ்ரேலில் இருந்து உக்ரைன் வரை, மேலும் நமது நாட்டின் தெற்கு எல்லை வரை அவர்கள் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், நாங்கள் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்கி, அதன் மூலம் அமைதியை மீட்டெடுப்போம்!
தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்பில் இருந்து இந்து அமெரிக்கர்களை நாங்கள் பாதுகாப்போம். இந்துக்களின் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். இந்தியாவுடனும் எனது நல்ல நண்பரான பிரதமர் மோடியுடனும் சிறந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவோம்.
அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அதிக வரிகளின் மூலம் கமலா ஹாரிஸ் உங்கள் சிறு வணிகங்களை அழித்துவிடுவார். இதற்கு நேர்மாறாக, நான் வரிகளையும், கட்டுப்பாடுகளையும் குறைத்தேன். அமெரிக்காவின் ஆற்றல் முழுமையாக வெளிப்பட நடவடிக்கை எடுத்தேன். வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கினேன். நாங்கள் மீண்டும் அதை செய்வோம். முன்னெப்போதையும் விட பெரியதாகவும் சிறப்பாகவும் செய்வோம். அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற இந்த தீபத் திருவிழா வழிவகுக்கும் என்று நம்புகிறேன்!” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT