Published : 31 Oct 2024 03:29 PM
Last Updated : 31 Oct 2024 03:29 PM
கோட்டக்கல்: கேரள மாநிலம் கோட்டக்கல் பகுதியில் உள்ள கோட்டூரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டபோது பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவியின் தலையில் பந்து தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பரசுராம் சேது மற்றும் சுப்ரியா தம்பதியரின் 15 வயது மகளான தபஸ்யா தான் இந்த சம்பவத்தில் உயிரிழந்தார். கடந்த 21-ம் தேதி பயிற்சியின் போது பந்து அவரது தலையில் பட்டுள்ளது. தொழில் நிமித்தமாக கேரளாவில் பரசுராம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பள்ளியில் பயிலும் சக மாணவர்களுடன் தபஸ்யா பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது பந்தை எதிர்கொள்ள அவர் தயாராவதற்கு முன்னதாகவே எதிர்முனையில் இருந்த பந்து வீச்சாளர் பந்தை வீசியுள்ளார். அதை தபஸ்யா தடுப்பதற்குள் பந்து தலையில் பட்டுள்ளது. அப்படியே அவர் களத்தில் நிலைகுலைந்து சரிந்து விழுந்துள்ளார். அப்போது அவர் தலைக்கவசம் அணியவில்லை என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் கோட்டக்கல் மருத்துவமனையில் தபஸ்யா அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT