Published : 31 Oct 2024 09:02 AM
Last Updated : 31 Oct 2024 09:02 AM
காந்திநகர்: சர்தார் வல்லபபாய் படேலின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ராஷ்ட்ரீய ஏக்தா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கேவாடியாவில் உள்ள ஒற்றுமைப் பேரணி மைதானத்தில் நடந்த பேரணியில் பிரதமர் கலந்து கொண்டார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த தீபாவளி நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த ஒளி திருநாளில் எல்லோருக்கும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, வளமாக வாழ வாழ்த்துகிறேன். லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் அருளால் அனைவருக்கும் வளம்பெறட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இந்த தீபாவளியை குஜராத்தின் கச்சாவில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாட உள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக அவர் கச்சாவில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது பண்டிகைகளை கச்சா மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT