Published : 31 Oct 2024 03:13 AM
Last Updated : 31 Oct 2024 03:13 AM
லடாக்: கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சாக் பகுதியிலிருந்து இந்தியா- சீனா ராணுவ படைகள் வாபஸ் பெறும் பணி நேற்று முடிவடைந்து விட்டது. தீபாவளியை முன்னிட்டு, இந்திய ராணுவத்தினருக்கு, சீன ராணுவத்தினர் இன்று இனிப்பு வழங்குகின்றனர்.
இந்தியா - சீன எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 2017-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது முதல் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் தொடங்கியது. அதன்பின் கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில், இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இச்சம்பம் இந்திய- சீன உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இப்பிரச்சினையை தீர்க்க ராணுவ உயர் அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் தரப்பில் பல கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்தன. கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டேம்சாக் பகுதியிலிருந்து இரு தரப்பு படையினர் வாபஸ் பெற்று ரோந்து பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டதாக இந்தியா கடந்த 21-ம் தேதி அறிவித்தது. அதன்பின்பு ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்தியாவும், சீனாவும் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இந்தியா சீனா ராணுவத்தினர் கிழக்கு லடாக் எல்லையின் தேப்சங் மற்றும் டெம்சோக் பகுதியில் இருந்து வாபஸ் பெறும் பணியை நேற்று நிறைவு செய்தனர். இங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதை சரிபார்க்கும் பணியில் இந்திய ராணுவம் நேற்று ஈடுபட்டது. இப்பகுதியில் இரு தரப்பு ராணுவத்தினரும் ரோந்து செல்லும் பணியை இம்மாதம் இறுதியில் மேற்கொள்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்திய ராணுவத்தினருக்கு சீன ராணுவத்தினர் இன்று இனிப்புகளை பரிமாறிக்கொள்கின்றனர்.
இது குறித்து இந்தியாவுக்கான சீன தூதர் ஜு ஃபெகாங் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷ்யாவில் கடந்த வாரம் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையே மிக முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. இரு தலைவர்களும் முக்கியமான புரிதலை எட்டியுள்ளனர். இரு நாடுகள் இடையே ஏற்படும் முன்னேற்றத்துக்கு, அந்த புரிதல்கள்தான் வழிகாட்டுதல்களாக இருக்கும். ஒருமனதான இந்த வழிகாட்டுதல்கள், நமது உறவுகளை எதிர்காலத்தில் சுமூகமாக்கி மேலும் முன்னேற்றும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT