Published : 31 Oct 2024 02:08 AM
Last Updated : 31 Oct 2024 02:08 AM

மகாராஷ்டிரா தேர்தலில் ’சீட்’ கிடைக்காததால் இரு முக்கிய கூட்டணியிலும் சுமார் 150 பேர் போர்க்கொடி

மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி மற்றும் மகாயுதி கூட்டணியில் அதிருப்தியாளர்கள் சுமார் 150 பேர் தங்கள் கட்சி அல்லது கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மகா விகாஸ் அகாடி மற்றும் மகாயுதி கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. அவர்கள் மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். மனுக்களை வாபஸ் பெற வரும் 4-ம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில் இரு கூட்டணியிலும் உள்ள அதிருப்தியாளர்கள் சுமார் 150 பேர் தங்கள் கட்சி அல்லது கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டுள்ளனர். இப்பிரச்சினை இரு கூட்டணிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளன.

இவர்களில் முக்கியமானவர்கள் பாஜக.,வின் கோபால் ஷெட்டி. போரிவிலி தொகுதியில் இவர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் சஞ்சய் உபாத்யாயை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சாஜன் புஜ்பாலின் நெருங்கிய உறவினர் சமீர், நாசிக் மாவட்டம் நந்கான் சட்டப்பேரவை தொகுதியில் சிவசேனா எம்எல்ஏ சுகாஷ் காண்டேவுக்கு எதிராக சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதிருப்தி தலைவர்கள் பலர் கூட்டணிக்கு எதிராக போட்டியிடுவது கவலை அளிப்பதாக மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மனுக்களை வாபஸ் பெற வரும் 4-ம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்குள் வேறுபாடுகள் கலையப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நவம்பர் 4-ம் தேதிக்கு பின்பே, ஒவ்வொரு கூட்டணியிலும் உள்ள அதிருப்தி தலைவர்களின் உண்மையான எண்ணிக்கை தெரியவரும் என கூறப்படுகிறது.

‘‘தகுதி மற்றும் வெற்றி வாய்ப்பு அடிப்படியிலேயே தொகுதிகள் முடிவு செய்யப்பட்டது’’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுனில் தத்கரே கூறுகையில், ‘‘மகாயுதி கூட்டணியின் தொகுதி பங்கீடு முறை, அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டு, வெற்றி பெறுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு முடிவு செய்யப்பட்டது. எங்கள் கூட்டணி நிச்சயம் ஆட்சியை தக்கவைக்கும். உட்கட்சி பிரச்சினைகளை தீர்க்க எங்கள் கட்சி மூத்த தலைவர்களை சந்தித்து பேசுவோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x