Published : 30 Oct 2024 04:30 PM
Last Updated : 30 Oct 2024 04:30 PM
பெங்களூரு: தனிப்பட்ட பயணமாக கடந்த 26ம் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் சார்லஸ் இன்று (அக்.30) அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரிட்டன் அரசராக பதவியேற்ற பிறகு சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் தனிப்பட்ட பயணமாக கடந்த 26ம் தேதி பெஙகளூரு வந்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஒயிட்ஃபீல்டில் உள்ள சவுக்கியா ஆரோக்கிய மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆரோக்கியத்துக்கான ஒருங்கிணைந்த சிகிச்சை முறைக்காக அறியப்பட்ட சவுக்கியா ஆரோக்கிய மையத்தை, முழுமையான சுகாதார ஆலோசகரான ஐசக் மத்தாய் நூரனால் என்பவர் நடத்தி வருகிறார். இவர், பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் நீண்டகால உறவுகளைக் கொண்டவர் என கூறப்படுகிறது.
சவுக்கியா ஆரோக்கிய மையம், தனித்துவமான, பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சார்லஸ் அறிவித்த நிலையில், அவரது இந்த மருத்துவ சிகிச்சைக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 4 நாள் சிகிச்சைக்குப் பிறகு அரச தம்பதியர் இன்று அதிகாலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக, சவுக்கியா ஆரோக்கிய மையத்தையும், ஐசக் மத்தாய் நூரனாலையும் அரச தம்பதியர் வெகுவாக பாராட்டியதாகக் கூறப்படுகிறது.
மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த வருகை, 'சூப்பர் பிரைவேட்' என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பான தனிப்பட்ட வருகை என்பதாலேயே, மாநில அரசு முறையான வரவேற்பை வழங்கவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தம்பதியர் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு வருகை தந்தபோதும், பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியபோதும் பொதுமக்களுக்குத் தெரியாத வகையில் போக்குவரத்து கவனமாக நிர்வகிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT