Last Updated : 30 Oct, 2024 02:47 AM

 

Published : 30 Oct 2024 02:47 AM
Last Updated : 30 Oct 2024 02:47 AM

ம.பி.யில் தீபாவளிக்காக மகாலட்சுமி கோயிலுக்கு நகைகள் வழங்கும் பக்தர்கள்: 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக திரும்ப அளிக்கும் விநோதம்

புதுடெல்லி: வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை ஐந்து நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி தீபாவளி பண்டிகை நேற்று தொடங்கியது. மத்திய பிரதேசத்தின் ரத்லாமில் உள்ள ஸ்ரீமகாலட் சுமி பெரிய கோயிலில் ஒரு வித்தியாசமான பழக்கம் உள்ளது.

பக்தர்கள் தங்களுடைய தங்க,வைர நகைகளையும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளையும் மகாலட்சுமி கோயிலில் டெபாசிட் செய்கிறார்கள். இவற்றை கோயில் நிர்வாகிகள் கணக்கிட்டு நோட்டுப்புத்தகத்தில் பதிவு செய்து, உரியவர்களிடம் ரசீது வழங்குகின்றனர். பின்னர் இந்த நகைகள் மற்றும் ரூபாய் நோட்டுகளைக் கொண்டு மகாலட்சுமி அம்மன், அருகிலுள்ள விநாயகர் மற்றும் சரஸ்வதியை அலங்காரம் செய்கின்றனர். இதை ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

ஐந்து நாள் தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு, அக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வழங்கிய நகைகள், ரூபாய் நோட்டுகளுக்கான ரசீதுகளை காண்பித்து அவற்றை திரும்பப் பெற்றுச் செல்கின்றனர். இதுபோல் பெறப்படும் நகைகளும், ரூபாய் நோட்டுக்களும் காணாமல் போனதாக இதுவரை புகார்கள் எழுந்ததில்லை. கோயிலின் உள்ளே, பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களும், சில காவலர்கள் 24 மணி நேரமும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அலங்கார மகாலட்சுமியை தரிசனம் செய்வதால் தங்களுக்கு செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இதேபோன்ற ஒரு வழக்கம், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள மகாலட்சுமி கோயிலிலும் உள்ளது. பக்தர்கள் ரூபாய் நோட்டுகளில் தங்கள் பெயர்களை எழுதி லட்சுமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். இவை ரூ.1 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகளாக இருக்கும். இவற்றால், அக்கோயிலின் லட்சுமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. தீபாவளி முடிந்ததும் இந்த தொகையை அளித்த பக்தர்களுக்கே பிரசாதமாக திருப்பி அளிக்கப்படுகிறது. இந்த தொகை கடந்த வருடம் ரூ.17.5 லட்சமாக இருந்தது. இந்த வருடம் இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பக்தர்கள் வழங்கிய நகைகள், ரூபாய்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அம்மன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x