Published : 30 Oct 2024 01:45 AM
Last Updated : 30 Oct 2024 01:45 AM

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: கடைசி நாளிலும் கட்சிகளிடையே நீடித்த குழப்பம்

மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளிலும் அரசியல் கட்சிகளிடையே குழப்பம் நீடித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் நவம்பர் 20-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று (அக்டோபர் 29) கடைசி நாளாகும். இந்தத் தேர்தலில் மாநிலத்தை ஆண்டு வரும் மகா யுதி கூட்டணியில் (சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பாஜக) உள்ள கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.

அதேபோல் எம்விஏ எனப்படும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ்) மீண்டும் கூட்டணியை உறுதி செய்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சி அலுவலகங்களில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

அதேபோல் மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜக முதலில் 150 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்தது. ஆனால் தற்போது 146 இடங்களில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது. தனக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 4 இடங்களை யுவ ஸ்வாபிமான் கட்சி, ராஷ்டிரிய சமாஜ் பக் ஷா, இந்திய குடியரசுக் கட்சி (அதவாலே), ஜன சுராஜ்யா சக்தி பக் ஷா போன்ற சிறிய கட்சிகளுக்கு பாஜக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் பாஜகவை சேர்ந்த 2 தலைவர்களின் பெயர்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளரான என்.சி. ஷைனா மும்பாதேவி தொகுதியிலும், அமோல் கடால் சங்கம்னர் தொகுதியிலும் சிவசேனா சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிவசேனா (ஏக்நாத்), தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் (அஜித் பவார்) மொத்தம் 138 தொகுதிகளில் போட்டியிடுவதாகத் தெரியவந்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் 80 பேர் போட்டியிடவுள்ளனர். பாஜகவை போலவே, சிவசேனா கட்சியும், ஜன் சுராஜ் கட்சி, ராஜஸ்ரீ ஷகுபிரகாஷ் அகாதி கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடத்தை வழங்கியுள்ளது.

மீதமுள்ள 58 இடங்களில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் போட்டியிடுகிறது. அனைத்துக் கட்சிகள் சார்பிலும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் 103 இடங்களிலும், சிவசேனா (உத்தவ்) சார்பில் 87 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் (சரத் பவார்) 82 இடங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் 272 தொகுதிகளில் 3 பெரிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஆனால் மீதமுள்ள 16 தொகுதிகள் யாருக்கு என்பதை இறுதி செய்வதில் கடைசி வரை பரபரப்பு நிலவியது. இந்தத் தொகுதிகள் அநேகமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாற்று வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாளிலும் மகாராஷ்டிராவிலுள்ள அரசியல் கட்சிகளிடையே குழப்ப நிலையே காணப்பட்டது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x