Published : 29 Oct 2024 04:24 PM
Last Updated : 29 Oct 2024 04:24 PM
புதுடெல்லி: "மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் ஏற்க மறுத்து வருவதால் இத்திட்டத்தின் பயன்களை அம்மாநில மக்கள் பெற முடியாத நிலை உள்ளது. இதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்" என பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
தன்வந்தரி ஜெயந்தி மற்றும் 9-வது ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு புதுடெல்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் சுமார் ரூ.12,850 கோடி மதிப்புள்ள சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 29) தொடங்கி வைத்தார். நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கி இருப்பவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, வருமான உச்சவரம்பு இன்றி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் டெல்லி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் இணையவில்லை. அரசியல் காரணங்களுக்காக அம்மாநில ஆளும் கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன.
அரசியல் காரணங்களுக்காக தங்கள் மாநிலத்தின் சொந்த மூத்த குடிமக்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுவது மனித நேயத்துக்கு எதிரானது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் என்னால் சேவை செய்ய முடிகிறது. ஆனால், டெல்லி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் சுவர்கள் காரணமாக உங்களுக்கு என்னால் உதவ முடியவில்லை" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT