Published : 29 Oct 2024 02:13 PM
Last Updated : 29 Oct 2024 02:13 PM
புதுடெல்லி: “ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை நிறைவேற்ற அனுமதிக்கும் அமைப்பை உருவாக்க அரசு செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
‘ரோஜ்கர் மேளா’ விழா மூலம் அரசு வேலைக்கு புதிதாக தேர்வாகியுள்ள 51,000 பேருக்கு பிரதமர் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக பணி நியமன ஆணையை வழங்கிய பின்பு பேசிய பிரதமர் மோடி பேசியது: “புதிய தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் செமிகன்டெக்டர் போன்ற புதிய துறைகளின் இருப்பை அதிகரிக்க இந்த அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது. இதன்மூலம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.
முந்தைய அரசிடம் கொள்கை மற்றும் நோக்கம் இல்லாததால் புதிய தொழில்நுட்பங்களில் உலகம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது இந்தியா பின்தங்கி இருந்தது. பழைய வழக்கொழிந்த தொழில்நுட்பங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்பட்டன. நவீன தொழில்நுட்பங்கள் நாட்டில் வளர முடியாது என்று நம்பும் மனநிலையும் இருந்தது. இந்த எண்ணம் எங்களுக்கு பல வகையில் தீங்கு இழைத்தது. நவீன உலகில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்கள் நாட்டில் இல்லையென்றால், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிகவும் கடினம்.
முந்தைய அரசின் இந்தப் பழைய மனநிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கான பணியினை நாங்கள் தொடங்கினோம். அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எனது அரசின் உறுதிப்பாடு. தண்ணீர் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கப்படுகின்றன. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுகின்றன. வளர்ச்சிப் பணிகள் வசதிகளை மட்டும் கொண்டு வருவதில்லை. அவை வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன.
அயோத்தியில் தனது இருப்பிடத்தில் ராமர் சிலை நிறுவப்பட்ட பின்பு வரும் இந்த முதல் தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தருணத்துக்காக பல தலைமுறையாக காத்திருந்தனர். பிஎல்ஐ (Production-linked Incentives) திட்டம் உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும். சாதனை மிக்க வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மிகப் பெரிய அளவிலான முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனது அரசின் கண்காணிப்பின் கீழ் 1.5 லட்சம் ஸ்டார்ட் அப்-கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஊதியத்துடன் கூடிய இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூலம் ஒரு கோடி இளைஞர்கள் பயனடைய இருக்கிறார்கள். நாட்டிள்ள இளைஞர்களுக்கு குடியேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை எளிமையாக்க இந்திய 21 நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது" என்று பிரதமர் பேசினார்.
மேலும், உலக அளவில் முன்னுதாரணமாக திகழும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, அவர்கள் ஆட்சியாளர்கள் இல்லை, மக்களுக்கான சேவகர்கள் என்று வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT