Published : 29 Oct 2024 02:18 AM
Last Updated : 29 Oct 2024 02:18 AM
புதுடெல்லி: ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்து போலீஸார் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் அரசு ஊழியர் என்று கூறி பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்துள்ளார்.
இதற்கு நடத்துநர், ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு இலவசப் பயணம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார். இதன் பிறகும் பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்று மோதலாக உருவெடுத்தது. பயணிகள் கூறியும் பெண் காவலர் பயணச்சீட்டு வாங்கவில்லை, பேருந்தை விட்டு இறங்கவும் இல்லை. இறுதியில் பெண் காவலருக்காக பயணி ஒருவர் ரூ.50 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.
இதுபற்றி அறிந்த ஹரியானா போக்குவரத்து போலீஸார், இதனை ஒரு அவமானமாக கருதினர். இதனால் தர்ஹரா வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பினர். இதற்கு ஏதாவது ஒரு விதிமீறல் காரணமும் காட்டியிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் போக்குவரத்து போலீஸார் தங்கள் மாநிலம் வந்த 100-க்கும் மேற்பட்ட ஹரியானா அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன் 8 பேருந்துகளை காவல் நிலையங்களில் நிறுத்திக் கொண்டனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் அரசுப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் புருஷோத்தம் சர்மா கூறும்போது, "பெண் காவலர் வாக்குவாதம் நடந்த மறுநாளில் இருந்து எங்கள் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நடத்துநர் மீது எந்தத் தவறும் இல்லை என ஹரியானா அரசிடம் கூறிவிட்டோம். இதை எழுத்துப்பூர்வமாகவும் அனுப்ப உள்ளோம்" என்றார்.
இரு மாநில போக்குவரத்து போலீஸாரின் இந்த மோதல் ஊடகங்களில் வெளியானது. இதற்கு காரணமான பெண் காவலர் - நடத்துநர் வாக்குவாதத்தின் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் இந்தப் பிரச்சினையில் இரு மாநில உயரதிகாரிகள் தலையிட வேண்டியதாயிற்று. இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்வது பாஜக என்பதால் அதன் முதல்வர்கள் இப்பிரச்சினையை பேசித் தீர்க்க இருப்பதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT