Published : 29 Oct 2024 01:39 AM
Last Updated : 29 Oct 2024 01:39 AM
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 3-வது பட்டியலை கட்சித் தலைமை நேற்று வெளியிட்டது.
மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு வரும் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. மனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது அக்டோபர் 30-ம் தேதி பரிசீலனை நடைபெறும்.
வேட்புமனுக்களை திரும்பப்பெற நவம்பர் 4-ம் தேதி கடைசி நாள். நவம்பர் 20-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 9.63 கோடியாக உள்ளது.
இந்நிலையில் தேர்தலில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்), பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி போட்டியிடவுள்ளது. அதேநேரத்தில் சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்), காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் மகாவிகாஸ் அகாதி கூட்டணி என்ற பெயரில் போட்டியிடவுள்ளன.
இந்நிலையில் ஏற்கெனவே இரண்டு கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டிருந்த பாஜக மேலிடம் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 4 பெண்கள் உட்பட 25 வேட்பாளர்கள் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன. ஆக இதுவரை பாஜக 146 வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 99 வேட்பாளர்களையும், 2-வது கட்டமாக 22 வேட்பாளர்களையும் பாஜக ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.
இதன்படி பாஜக மூத்த தலைவர் அவினாஷ் ஆனந்த்ராவ் பிரம்மான்கர் சகோலி தொகுதியில் போட்டியிடுகிறார். முர்ஜிதாப்பூரில் ஹரிஷ் மரோட்டியப்பா, கரஞ்சாவில் சாய் பிரகாஷ் தஹாகே, டியோசாவில் ராஜேஷ் ஸ்ரீராம் வான்கடே, மோர்ஷியில் உமேஷ் யவால்கர் போட்டியிடவுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT