Published : 28 Oct 2024 03:05 PM
Last Updated : 28 Oct 2024 03:05 PM
புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
வக்பு சட்டத் திருத்த மசோதா மீதான நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதின் ஒவைசி, ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங், திமுகவின் முகமது அப்துல்லா, காங்கிரஸின் நசீர் உசேன், முகமது ஜாவேத், சமாஜ்வாதி கட்சியின் மொஹிபுல்லா நட்வி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழு கூட்டத்தில் டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார், குழுவின் தலைவரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். பின்னர் அந்த அறிக்கை அனைவருக்கும் பகிரப்பட்டது. அறிக்கையை படித்துப் பார்த்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி.க்கள், 'நாடாளுமன்றக் கூட்டுக் குழு தலைவரிடம் டெல்லி வக்பு வாரிய நிர்வாகி அஸ்வினி குமார் தாக்கல் செய்த அறிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வக்பு வாரியத்தின் ஆரம்ப அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்கள் இதில் இல்லை. டெல்லி அரசுக்குத் தெரியாமல் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதைக் கண்டித்தே வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று கூறினர்.
பின்புலம் என்ன? - நாட்டில் மத்திய பாதுகாப்புத் துறை, ரயில்வே ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக நிலங்கள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தச் சொத்துகளை கண்காணிக்க, கடந்த 1954-ல் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்பு வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பிறகு கடந்த 1995-ம் ஆண்டு வக்பு சட்டம் விரிவுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வக்பு வாரியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்தியில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்றத்தில் புதிய வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இதையடுத்து, அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், வக்பு வாரிய உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சமுதாய பிரதிநிதிகளிடம் ஜேபிசி கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT