Published : 28 Oct 2024 01:08 PM
Last Updated : 28 Oct 2024 01:08 PM
வதோதரா (குஜராத்): ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா நிறுவனத்தின் ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் ஆகியோர் இணைந்து இந்நிறுனத்தை திறந்து வைத்தனர்.
ராணுவ வீரர்கள் மற்றம் தளவாடங்களைக் கொண்டு செல்ல, மருத்துவ மீட்புப் பணிகளில் ஈடுபட, விமானத்தில் இருந்து குண்டுகளை வீச, விஐபி பயணத்துக்குப் பயன்படுத்த என பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட C-295 விமானங்களை முழுவதுமாக உள்நாட்டில் தயாரிப்பதற்கான முதல் தொழிற்சாலை நிறுவனமான டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) குஜராத்தின் வதோதராவில் இன்று திறந்து வைக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை உள்நாட்டில் தொடங்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ்-ம் இணைந்து இந்நிறுனத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்காக வதோதராவில் TATA-Airbus விமான அசெம்பிளி வசதி வளாகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இருந்து TATA Advanced Systems Limited நிறுவனம் C-295 விமானங்களைத் தயாரிக்க உள்ளது. இது புதிய இந்தியாவின் பணி கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது.
நாட்டின் சிறந்த மகனாக விளங்கிய ரத்தன் டாடாவை சமீபத்தில் இழந்தோம். இன்று அவர் நம்மிடையே இருந்திருந்தால், மகிவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவரது ஆன்மா எங்கிருந்தாலும், அவருக்கு மகிழ்ச்சியைத் தரும்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, ரயில் பெட்டிகளை உருவாக்க வதோதராவில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொழிற்சாலையும் சாதனை நேரத்தில் உற்பத்திக்கு தயார் செய்யப்பட்டது. இன்று அந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மெட்ரோ பெட்டிகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விமானங்கள் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
இன்று இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு புதிய உயரங்களைத் தொட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இந்த நிலையை எட்டுவது சாத்தியமில்லை. அந்த நேரத்தில், இந்தியாவில் இவ்வளவு பெரிய அளவிலான பாதுகாப்பு உற்பத்தி இருக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் புதிய பாதையில் நடக்க முடிவு செய்தோம். நமக்கென்று ஒரு புதிய இலக்கை நிர்ணயித்தோம். இன்று அதன் விளைவு நம் முன் உள்ளது” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “இன்று ஒரு அதிநவீன தொழில்துறை வசதியை நாம் அதிகாரப்பூர்வமாக திறந்துள்ளோம். அதுமட்டுமல்ல, இரண்டு நிறுவனங்களுக்கிடையில் ஒரு அசாதாரண திட்டம் எவ்வாறு யதார்த்தமாகிறது என்பதையும் இன்று நாம் காண்கிறோம். பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி இது. இந்தியாவை ஒரு தொழில்துறை சக்தியாகவும் முதலீடு மற்றும் வணிகத்திற்கான காந்தமாகவும் மாற்ற வேண்டும் என்பதே அவரது நோக்கமாக உள்ளது. ஏர்பஸ் மற்றும் டாடா இடையேயான இந்த கூட்டு, இந்திய விண்வெளித் துறையின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். அதோடு, பிற ஐரோப்பிய நிறுவனங்களின் வருகைக்கும் புதிய கதவுகளைத் திறக்கும்” என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், “இன்னும் சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை நாங்கள் வழங்குவோம் என்று நான் எங்கள் பிரதமருக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். முதல் விமானம் தயாரானதும் உங்களின் (பிரதமர் மோடி) அலுவலகத்துடன் இணைந்து உங்களின் தேதியை கோருவோம். நீங்கள் வந்து முதல் விமானத்தை பெறலாம்.
டாடா குழுமத்தைச் சேர்ந்த முதல் 200 பொறியாளர்கள் ஏற்கனவே ஸ்பெயினில் பயிற்சி பெற்றுள்ளனர். மேலும் நாங்கள் 40 SME நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளோம். விமானம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதற்கு ஏற்ப மேலும் பல நிறுவனங்களை எங்களோடு சேர்ப்போம்.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் ஸ்பெயின் இடையேயான இந்த ஒத்துழைப்பு, நாட்டின் விண்வெளி திறன்களை உயர்த்தும். TASL இன் வதோதரா வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை, ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 C-295 ராணுவ போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக 2021 இல் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது ரூ.2.5 பில்லியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். ஒப்பந்தத்தின் கீழ், 16 விமானங்களை ஏர்பஸ் ஸ்பெயினிலிருந்து நேரடியாக வழங்கும். மீதமுள்ள 40 விமானங்கள் இந்தியாவில் TASL மூலம் தயாரிக்கப்படும்.
இந்தத் திட்டம் விமானத்தின் முழு சுழற்சியான அசெம்பிளி, சோதனை, சான்றிதழ் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். விமான மேம்பாட்டிற்கான ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை இது உருவாக்கும். பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) போன்ற முக்கிய இந்திய பாதுகாப்பு நிறுவனங்களும் சிறு நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தில் பங்களிக்கின்றன. C-295 விமானம் நவீன மற்றும் நம்பகமான போக்குவரத்து தீர்வுடன் இந்தியாவின் விமானப்படையை பலப்படுத்தும்” என தெரிவித்தார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்ஸெ் ஆகியோர் வதோதராவில் ரோட் ஷோ நடத்தினர். ஏராளமான மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT