Published : 28 Oct 2024 04:23 AM
Last Updated : 28 Oct 2024 04:23 AM

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை

புதுடெல்லி: அரசு அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுக்கும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதுபோன்ற மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக மக்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் 115-வது அத்தியாயம் நேற்று ஒலிபரப்பானது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: சமீபகாலமாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிகரித்து வருகிறது. காவல் துறை, சிபிஐ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல நடித்து, தனிப்பட்ட நபர்களின் செல்போனில் தொடர்பு கொண்டு போலியாக மிரட்டல் விடுப்பார்கள்.

இவ்வாறு செய்து, தனி மனிதர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வைத்துக் கொண்டு, அவர்களை நம்பவைத்து மிரட்டி, கடின உழைப்பின் மூலம் சம்பாதித்த லட்சக்கணக்கான பணத்தை அபகரித்து விடுகின்றனர். செல்போனில் இதுபோன்ற அழைப்புகள் வந்தால் நீங்கள் அச்சத்தை தவிர்க்க வேண்டும். அந்த சூழலில், நீங்கள் மூன்று விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். நிதானமாக இருங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள் என்பதுதான் அது.

எந்த ஒரு அரசு அமைப்பும் இதுபோல செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்காது. அதேபோல, காணொலி அழைப்பு வாயிலாக விசாரணை மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். செல்போன் அல்லது காணொலி வாயிலாகவே மிரட்டி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்வதற்கு சட்டத்தில் இடம் கிடையாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் கும்பல்களை பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்காகவே தேசிய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என மக்களை வீணாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடி நபர்கள் குறித்து தேசிய சைபர் கிரைம் உதவிஎண்ணான ‘1930’-ஐ தொடர்பு கொண்டோ, cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகைய மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, இதுபோன்ற மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த லட்சக்கணக்கான சிம்கார்டு, செல்போன், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சைபர் மோசடிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில் மாணவர்களை ஈடுபடுத்துமாறுபள்ளி, கல்லூரிகளுக்கு வலியுறுத்துகிறேன். சமூகத்தில் கூட்டு முயற்சியால் மட்டுமே இதுபோன்ற சவால்களை நாம் சமாளிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x