Published : 28 Oct 2024 12:51 AM
Last Updated : 28 Oct 2024 12:51 AM

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சட்டவிரோத இரும்புத் தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் செயில் உட்பட 7 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக இரும்புத்தாது வெட்டி எடுக்கப்படுவதாகவும் அவை பெலகேரி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், பெலகேரி துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல டன் இரும்புத் தாதுவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கர்நாடக லோக் ஆயுக்தா கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நடத்தியது. சுங்கம், வனம் அல்லது போக்குவரத்து துறையின் அனுமதி இல்லாமல் சுமார் 8 லட்சம் டன் இரும்புத் தாது பெல்லாரியிலிருந்து பெலகேரி துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கர்நாடக மாநிலம் கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ சதிஷ் செயிலுக்கு சொந்தமான மல்லிகார்ஜுன ஷிப்பிங் நிறுவனம் இந்த சட்டவிரோத ஏற்றுமதியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக எம்எல்ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செயில் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. சதிஷ் செயில் கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ரூ.250 கோடி மதிப்பிலான இரும்புத் தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், சதிஷ் செயில் உட்பட 7 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் கடந்த 24-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. துறைமுக பாதுகாவல் துணை அதிகாரி மகேஷ் பிலியே, கரடாபுடி மகேஷ், கே.வி.நாகராஜ், பிரேம் சந்த் கார்க், கே.வி.கோவிந்தராஜு மற்றும் சேத்தன் ஷா ஆகிய 6 பேர் மற்ற குற்றவாளிகள் ஆவர். இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் குற்றவாளிகள் அனைவருக்கும் 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். மேலும், அனைவருக்கும் ரூ.44 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதில் செயிலுக்கு மட்டும் ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து லோக் ஆயுக்தா முன்னாள் நீதிபதியும் இந்த வழக்கை முதலில் விசாரித்தவருமான சந்தோஷ் ஹெக்டே கூறும்போது, “இந்த தீர்ப்பு தவறு செய்பவர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x