Published : 27 Oct 2024 05:40 PM
Last Updated : 27 Oct 2024 05:40 PM

55,000 டாலர் கேட்டு லக்னோவின் 10 ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

ஹோட்டல்களில் ஆய்வு செய்யும் வெடி குண்டு நிபுணர்கள்

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் லக்னோவில் உள்ள முக்கியமான 10 ஹோட்டல்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலில் 55 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படவில்லையெனில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “உங்களின் ஹோட்டலின் அடித்தளத்தில் கருப்பு பை ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. எனக்கு 55,000 டாலர்கள் கொடுக்க வேண்டும், தவறும்பட்சத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வேன். எங்கும் ரத்த ஆறு ஓடும். வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டாலும் வெடிகுண்டுகள் வெடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “ஜாபர்சாதிக் கைது காரணமாக சர்வதேச அழுத்தம் அதிகாரித்துள்ளது. இந்தவழக்கில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப பள்ளிகளுக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அவசியம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு மிரட்டல் லக்னோவில் உள்ள மார்ரியோட், சரகா, பிக்காடிலி, கம்ஃபோர்ட் விஸ்டா, ஃபார்ச்சுன், லெமன் ட்ரீ, க்ளார்க் அவாத், காசா, டயல் கேட்வே மற்றும் சில்வேட்டா ஆகிய ஹோட்டல்களுக்கு விடுக்கப்பட்டுள்ளன.

மிரட்டல் வந்தவுடன் ஹோட்டல் நிர்வாகங்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தன. இதனைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தினர்.

ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தில் கோயில் பகுதியில் உள்ள மூன்று ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்பு இந்த மிரட்டல் வந்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம் பெங்களூருவில் உள்ள தாஜ் வெஸ்ட் எண்ட் -க்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தனர். விசாரணைக்கு பின்பு அந்த மிரட்டல் புரளி என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x