Published : 27 Oct 2024 09:30 PM
Last Updated : 27 Oct 2024 09:30 PM
மும்பை: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியாவும் சீனாவும் விரைவில் ரோந்துப் பணியைத் தொடங்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “டெம்சோக் மற்றும் டெப்சாங்கில் 2020 அக்.31-க்கு முந்தைய ரோந்து நிலைமை மீண்டும் மீட்டெடுக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கு சிறிது காலம் எடுக்கும். அக்டோபர் 21-ம் தேதி ஏற்பட்ட சமீபத்திய ஒப்பந்தம், எல்லைப் பகுதிகளில் ரோந்து செல்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குகிறது. இரண்டு நாடுகளும் 2020-க்கு முந்தைய நிலைமைக்குத் திரும்புவதற்கு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
துருப்புகளைத் திரும்பப் பெறுவது மற்றும் ரோந்து தொடர்பாக இன்னும் சில பிரச்சினைகள் உள்ளன. எல்லைப்புற மேலாண்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் எதிர்கால பேச்சுவார்த்தைகளில் கவனம் செலுத்தப்படும். இந்தியாவின் பாதுகாப்புக்காக நமது ராணுவத்தினர் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தத்துக்கு பின்பு, கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் மற்றும் டெஸ்பாங் இடையே இரு நாடுகளும் தங்களின் துருப்புகளை திரும்பப் பெற்று வருகின்றன. இந்த பணிகள் அக். 28-29-க்குள் நிறைவடையும். தற்போதைய ஒப்பந்தம் டெம்சோக் மற்றும் டெஸ்பாங் ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் மட்டுமேயானது. மற்ற எல்லைப்புற இடங்களுக்காக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT