Published : 27 Oct 2024 03:30 PM
Last Updated : 27 Oct 2024 03:30 PM

“நிதானியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்” - டிஜிட்டல் கைது குறித்து பிரதமர் மோடி அறிவுரை

கோப்புப்படம்

புதுடெல்லி: டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தார். இது மிகவும் குறிப்பிடத்தகுந்த கவலை என்று விவரித்த பிரதமர் இந்த பிரச்சினையை கையாளும் போது, காத்திருந்து, சிந்தித்து, நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.

பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி உரையான மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டுமக்களுக்கு இவ்வாறு ஆலோசனை வழங்கினார். தனது உரையின் போது, உரையாடல் பதிவு ஒன்றினை பிரதமர் ஒலிக்க விட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர், “நீங்கள் இப்போது கேட்ட உரையாடல், டிஜிட்டல் கைது மோசடி தொடர்பானது. இந்த உரையாடல் பாதிக்கப்பட்ட நபருக்கும், மோசடி செய்பவருக்கும் இடையிலானது. டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர், போலீஸாகவோ, சிபிஐ ஆகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, வங்கி அதிகாரியாகவோ சொல்லிக் கொண்டு, இப்படி விதவிதமான வகைகளில் போலி அதிகாரிகளாகப் பேசுவார்கள், மிகுந்த துணிச்சலோடு பேசுவார்கள்.

நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவர்களின் முதல் தந்திர உத்தி உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் திரட்டிக் கொள்வது. அடுத்த தந்திரம், அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவது; அதாவது சட்டப் பிரிவுகளைச் சொல்லி, உங்களுக்குள்ளே அச்சத்தை விதைப்பார்கள்.

மூன்றாவது தந்திரம், நேரக்குறைவு என்ற அழுத்தம். “இப்பவே நீங்க முடிவெடுத்தாகணும் இல்லைன்னா உங்களை கைது செய்ய வேண்டியிருக்கும்” என்று சொல்லி, பாதிக்கப்பட்டவருக்கு உளவியல் ரீதியாக தாங்கமுடியாத அளவுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவார்கள்.

உங்களுக்கு இது போன்ற அழைப்புகள் வந்தால் நீங்கள் அச்சத்தைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு வழியாக புலனாய்வு மேற்கொள்ளாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பின் மூன்று படிநிலைகளைப் பற்றிக் கூறுகிறேன். “நிதானியுங்கள், சிந்தியுங்கள், செயல்படுங்கள்”. அழைப்பு வந்தால், “நிதானமாக இருங்கள், அச்சப்படாதீர்கள். அவசரப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாதீர்கள், முடிந்தால் ஸ்க்ரீன் ஷாட் அதாவது செல்பேசி திரையின் புகைப்படத்தை எடுங்கள், உரையாடலைக் கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்யுங்கள்.

அடுத்த கட்டம், சிந்தியுங்கள். எந்த ஒரு அரசு அமைப்பும் தொலைபேசி-அலைபேசி வாயிலாக இப்படிப்பட்ட மிரட்டலை விடுக்காது, காணொளி அழைப்பு வாயிலாகவும் புலனாய்வு செய்யாது, அதே போல பணம் தர வேண்டும் என்று கேட்காது, பயம் ஏற்பட்டால், ஏதோ கோளாறு இருக்கிறது என்று தெளியுங்கள். முதல் கட்டம், இரண்டாவது கட்டத்திற்குப் பிறகு வருவது மூன்றாவது கட்டம். நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.

தேசிய சைபர் உதவி எண்ணான 1930 என்ற எண்ணோடு தொடர்பு கொண்டு, cybercrime.gov.in என்ற இணையத்தளத்திற்குத் தெரிவியுங்கள், குடும்பத்தினர் மற்றும் காவல்துறைக்குத் தகவல் தெரிவியுங்கள். ஆதாரத்தைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். இந்த மூன்று படிநிலைகளும் உங்களுடைய டிஜிட்டல் பாதுகாப்புக் காவலர்களாக ஆகும்.

நண்பர்களே, நான் மீண்டும் கூறுகிறேன், டிஜிட்டல் கைது போன்ற அமைப்பு சட்டத்திலே கிடையாது, இது பச்சையான மோசடி, புரட்டு, போக்கிரிகளின் கும்பல் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது, இவர்களைப் பிடிக்க அனைத்து புலனாய்வு அமைப்புகளும், மாநில அரசுகளோடு இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்காக தேசிய சைபர் ஒருங்கிணைப்பு மையம் நிறுவப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x