Published : 27 Oct 2024 05:52 AM
Last Updated : 27 Oct 2024 05:52 AM

ராணுவ விமான உற்பத்தி ஆலையை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் செல்கிறார். வடோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் (டிஏஎஸ்எல்) வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்பட உள்ளது. இது இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தியில் மிகச்சிறந்த மைல்கல் ஆகும். இந்த ஆலைக்கு பிரதமர் மோடி கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அடிக்கல் நாட்டினார்.

இந்திய ராணுவத்துக்காக மொத்தம் 56 சி-295 ரக விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 16 விமானங்கள் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 40 விமானங்கள் டிஏஎஸ்எல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ராணுவ விமானத்தை தயாரிக்க இருக்கும் முதல் தனியார் வளாகமாக இது இருக்கும்.

இந்த விமான தயாரிப்பு திட்டத்துக்கு டாடா நிறுவனம் மட்டுமல்லாது பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பாரத் டைனமிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும் சில குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கும்.

பின்னர் வடோதராவில் உள்ள லட்சுமி விலாஸ் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். அங்கிருந்து மதியம் 2.45 மணிக்கு அம்ரேலிக்கு செல்லும் பிரதமர் மோடி, பாரத் மாதா சரோவர் அணையை திறந்து வைக்க உள்ளார். இதுதவிர அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில், மொத்தம் ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x