Published : 26 Oct 2024 04:32 PM
Last Updated : 26 Oct 2024 04:32 PM
புதுடெல்லி: கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி வத்ரா, தனது மற்றும் தனது கணவரின் சொத்துகள் குறித்த முழு தகவல்களை வெளியிடவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் கணவன்/மனைவி மற்றும் தங்களைச் சார்ந்தவர்களின் சொத்துகள் குறித்த விவரங்களை முழுமையாக வெளியிட வேண்டும். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு. இந்த உத்தரவை பிரியங்கா காந்தி மீறியுள்ளார். வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரியங்கா காந்தி வதேரா தனது மற்றும் தனது கணவர் சொத்துக்கள் குறித்த விவரங்களை முமையாக வெளியிடவில்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவு அனைத்து குடிமக்களையும் கட்டுப்படுத்துகிறது. காந்தி குடும்பம் சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல. பிரமாணப் பத்திரத்தில் யாராவது தவறான தகவல்களை அளித்தால், தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு உரிமை இல்லை. நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துகளை யங் இண்டியா நிறுவனம் மூலம் காந்தி குடும்பத்தினர் அபகரித்தனர். காந்தி குடும்பத்தினர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்த சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதில், பிரியங்கா காந்தி வதேராவுக்கு உரிமையுள்ள பங்குகள் குறித்த விவரங்களை அவர் குறிப்பிடப்படவில்லை. இது அத்தியாவசிய தகவல்களை வெளியிடாததற்கு சமம்.
இந்த விவகாரத்தில் பிரியங்கா காந்தி வதேரா பதிலளிக்க வேண்டும். காங்கிரஸ் சட்டத்துக்கு இணங்க வேண்டும். இல்லாவிட்டால், அது கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அரசியலமைப்பை சட்டத்துக்கு உட்பட்டு இவ்விஷயத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாஜக எடுக்கும். காந்தி குடும்பம், சட்டத்தை புறக்கணித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என தெரிவித்தார்.
வயநாடு இடைத் தேர்தலில் தாக்கலாகும் வேட்புமனுக்கள் வரும் 28-ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT