Published : 26 Oct 2024 03:20 PM
Last Updated : 26 Oct 2024 03:20 PM

மகாராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வெளியிட்டது. கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி விவாதித்த பின்பு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலில் 48 பேரின் பெயரினை வெளியிட்டிருந்தது. தற்போது இரண்டாவது பட்டியலில் 23 பேரை அறிவித்துள்ளது. இதன்படி, காங்கிரஸ் இதுவரை 71 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் கேதரின் மனைவி அனுஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (என்டிசிசிபி) ஊழலில் தண்டனை பெற்று 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தார். அவர் நாக்பூர் மாவட்டத்தின் சாயோனர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஜல்னா தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ கைலாஷ் கோராண்டியல் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்கள் 25 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தவரும், முன்னாள் துணை சபாநாயகருமான மூத்த காங்கிரஸ் தலைவர் வசந்த் புர்கே ரலேகான் (யவத்மால்) தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தோல்வியை தழுவிய சிவாஜிராவ் மோகே தனது மகன் ஜித்தேந்ராவுக்கு வழிவிட்டு அவரை ஆர்னி தொகுதியில் நிறுத்துகிறார். மும்பையில், காலு பதேலியா கிழக்கு காந்திவளியிலும், கணேஷ் யாதவ் கோலிவாடா தொகுதியிலும், யஷ்வந்த் சிங் சார்கோப் தொகுதியிலும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்துக்கு பின்னர் பேசிய மகாராஷ்டிர தேர்தலுக்கான மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா, "மகாராஷ்டிராவில் மீதமுள்ள இடங்கள் குறித்து மத்திய தேர்தல் குழு விவாதம் நடத்தியது. மகா விகாஸ் அகாடி ஒற்றுமையாக இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. எங்களுக்குள் முரண்பாடுகள் இல்லை. மகாராஷ்டிர மக்களின் கனவை நினைவாக்க நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். மகா விகாஸ் அகாதி நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த ஊழல் அரசைத் தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டார்கள்" என்று தெரிவித்தார்.

மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோல் கூறுகையில், "மக்களவைத் தேர்தலை விட இந்தச் சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி சிறப்பாக செயல்படும். நாங்கள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x