Published : 26 Oct 2024 10:43 AM
Last Updated : 26 Oct 2024 10:43 AM

ஜார்க்கண்ட் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ எம்.எஸ். தோனி நியமனம்: தேர்தல் ஆணையம்

எம்எஸ் தோனி | கோப்புப்படம்

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘பிராண்ட் அம்பாசிடராக’ நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தோனி அனுமதி அளித்துள்ளார் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி கே.ரவி குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ரவி குமார், "மகேந்திர சிங் தோனி தனது புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மற்ற விபரங்கள் குறித்து அவரிடம் தொடர்பு கொண்டுள்ளோம். வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார்.

SWEEP (வாக்களர்களுக்கான முறையான கல்வி மற்றும் வாக்குப்பதிவில் பங்கேற்பு)-ன் கீழ் தோனி வாக்காளர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை செய்வார். அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாக்காளர்களிடம் தூண்ட தோனியின் வேண்டுகோள் மற்றும் பிரபல்யம் பயன்படும் என்று தேர்தல் ஆணையம் நம்புகிறது" என்று தெரிவித்தார்.

ஜார்க்கண்ட்டில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20 என இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றன.

முதல் கட்டமாக நவம்பர் 13ம் தேதி 43 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் வேட்பாளர்களில் ஒருவரான மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சம்பை சோரன், சரிகேலா தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார்.

அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரவை (ஏஜெஎஸ்யு) கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான சுதேஷ் மஹதோ, சில்லி தொகுதியில் களம் காணுகிறார்.

ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 பேர் அடங்கிய தனது முதல் வேட்பாளர்கள் பட்டியலை அக்.23ம் தேதி வெளியிட்டது. ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான 66 வேட்பாளர்கள் அடங்கிய தனது முதல் பட்டியலை பாஜக அக்.19ம் தேதி வெளியிட்டுது.

அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் (ஏஜெஎஸ்யு), ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலை பாஜக சந்திக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x