Published : 25 Oct 2024 06:28 PM
Last Updated : 25 Oct 2024 06:28 PM

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெறுவது உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஜெர்மனி பிரதமர் கருத்து

புதுடெல்லி: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அது உலகின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜெர்மனியின் 18-வது ஆசிய - பசிபிக் மாநாட்டில் உரையாற்றிய ஒலாஃப் ஸ்கோல்ஸ், "புவிசார் அரசியல் பதற்றங்களைத் தீர்ப்பதில் ராஜதந்திரம் மற்றும் சட்டக் கட்டமைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மோதல்களுக்கு அரசியல் தீர்வுகளைக் கொண்டுவர நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணப்பட வேண்டும்.

மத்திய கிழக்கு, தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் உட்பட பல பிராந்தியங்களில் அதிகரித்து வரும் பதற்றங்களுடன் உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, ஐரோப்பாவை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் செழுமையையும் சீர்குலைக்கும். உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத, மிருகத்தனமான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அதன் விளைவுகள் ஐரோப்பாவுக்கு அப்பால் நீண்டு செல்லும். அத்தகைய விளைவு உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த செழிப்புக்கு ஆபத்தை விளைவிக்கும்.

உலகளாவிய போலீஸ்காரர் இல்லை. நமது பொதுவான விதிகள் மற்றும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்புக் குழுவும் இல்லை. அவற்றைப் பாதுகாப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகியவற்றில் இந்தியா-ஜெர்மனி உறவுகளை ஆழப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.

எங்கள் செய்தி தெளிவாக உள்ளது. எங்களுக்கு அதிக ஒத்துழைப்பு தேவை, குறைவாக இல்லை. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு மூலம் இரு நாட்டு ராணுவத்தினரையும் நெருக்கமாக கொண்டு வருவதற்கான திட்டங்கள் நாம் மேற்கொண்டு வருகிறோம். வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையுடன் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா சாதனைகளை படைத்து வருகிறது" என குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x