Published : 25 Oct 2024 04:50 PM
Last Updated : 25 Oct 2024 04:50 PM

ஒவ்வொரு எம்பிபிஎஸ் மாணவருக்கும் அரசு ரூ.35 லட்சம் வரை செலவிடுகிறது: மத்திய அமைச்சர் நட்டா

புதுடெல்லி: ஒவ்வொரு எம்.பி.பி.எஸ் மாணவருக்கும் அரசு 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் உறுப்பு நிறுவனமான மருத்துவ அறிவியல் கல்லூரியின் 53-வது நிறுவன தினம் மற்றும் பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா இன்று (25.10.2024) தலைமை வகித்தார். அவருடன் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய நட்டா, "மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும், சுகாதாரத் துறையில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்குமான பயணத்தைத் தொடங்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ பட்டதாரிகள் தங்கள் பணியை கருணை, நேர்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் மேற்கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கையை 6ல் இருந்து 22 ஆக உயர்த்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 387ல் இருந்து 766 ஆக அதிகரித்துள்ளோம். அடுத்த ஐந்தாண்டுகளில் 75,000 மருத்துவ இடங்களை மேலும் அதிகரிக்க பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நமது அரசாங்கம் 2017 ஆம் ஆண்டில் தேசிய சுகாதாரக் கொள்கையை மாற்றியது. நோய்களை முற்றிலுமாக குணப்படுத்துதல் என்ற கோணத்தில் இருந்து, ஒருங்கிணைந்த நோய் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்பு என்பதாக மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதிலும் மருத்துவ சேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் அரசு உறுதியாக உள்ளது.

ஒவ்வொரு எம்.பி.பி.எஸ் மாணவருக்கும் அரசு 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவிடுகிறது. புதிய மருத்துவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கும்போது அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார். கல்லூரி டீன் பலராம் பானி மகேஷ் வர்மா, தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் பேராசிரியர் பி.சீனிவாஸ், மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x