Published : 25 Oct 2024 04:41 PM
Last Updated : 25 Oct 2024 04:41 PM

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த நால்வருக்கு துணைநிலை ஆளுநர் அஞ்சலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் 2 போர்ட்டர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத் தளமான குல்மார்க்கில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போட்டா பத்ரி என்ற இடத்தில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் ராணுவ வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர்கள் இருவர் மற்றம் ராணுவ போர்ட்டர்கள் இருவர் என 4 பேர் உயிரிழந்தனர். நேற்று மாலை (அக்.24) இந்த தாக்குதல் நடந்தது.

உயிரிழந்த ராணுவ வீரர்கள் கைசர் அகமது, ஜீவன் சிங் என்பதும், போர்ட்டர்கள் முஷ்டாக் அகமது சவுத்ரி, ஜாஹூர் அகமது மிர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர்களின் உடல்களுக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "அக்டோபர் 24, 2024 அன்று போட்டா பத்ரி என்ற இடத்தில் நாட்டிற்கான சேவையில் மிக உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான வீரர்கள் மற்றும் பாதுகாப்பு போர்ட்டர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களின் தன்னலமற்ற சேவையையும் அவர்களின் உயர்ந்த தியாகத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. உயிரிழந்த குடும்பத்தினருடன் நாங்கள் ஆதரவாக நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் தொடர் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதற்கு சரியான தீர்வு கிடைக்கும் வரை இது நிற்காது. இது எங்கிருந்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். 30 ஆண்டுகளாக நான் இதைப் பார்த்து வருகிறேன். அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்.

நாம் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில்லை. அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள் - அவர்கள் தங்கள் நாட்டையும், அங்குள்ள பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும். இதையெல்லாம் நிறுத்திவிட்டு நட்புறவுக்கான வழியைக் கண்டறிய வேண்டும். உயிர் இழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த தாக்குதலில் இரண்டு போர்ட்டர்களும் உயிரிழந்தனர். தியாகிகளுக்கு வணக்கம் செலுத்துவதுடன், உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பையும் அமைதியையும் நிலைநாட்டுவதில் மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கொள்கைகள் முற்றிலும் தோல்வியடைந்துள்ளன. அவர்களின் கூற்றுகளுக்கு மாறாக, பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின்றன. நமது வீரர்கள் மற்றும் பொதுமக்கள் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். அரசு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது என்பதே உண்மை. அரசாங்கம் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பள்ளத்தாக்கில் விரைவில் அமைதியை மீட்டெடுக்க வேண்டும். இராணுவம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x