Published : 25 Oct 2024 02:25 PM
Last Updated : 25 Oct 2024 02:25 PM
புதுடெல்லி: இந்தியா - ஜெர்மனி இடையேயான நட்பு ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் ஆழமாகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து டெல்லியில் நடைபெற்ற ஜெர்மனியின் ஆசிய பசுபிக் மாநாட்டில் இரு தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். பிரதமர் மோடி பேசும்போது, “இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனது நண்பர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நான்காவது முறையாக இந்தியா வந்துள்ளார். இது இந்தியா-ஜெர்மனி உறவில் அவர் கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜெர்மனியின் ஆசிய பசிபிக் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஒரு பக்கம் தலைமை செயல் அதிகாரிகள் (சிஇஓ) அமைப்புகளின் கூட்டம் நடக்கிறது. மற்றொரு பக்கம் நமது இரு நாடுகளின் கடற்படைப் படைகள் பயிற்சி செய்து வருகின்றன. இந்தியா-ஜெர்மனி இடையேயான மூலோபாய கூட்டாண்மை ஏற்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. அடுத்த 25 ஆண்டுகள் நமது இந்த உறவுகளுக்கு புதிய உயரங்களை கொடுக்கும்.
வரவிருக்கும் 25 ஆண்டுகளுக்காக வளர்ச்சி அடைந்த இந்தியா திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முக்கியமான நேரத்தில், ஜெர்மனியின் அமைச்சரவை 'ஃபோகஸ் ஆஃப் இந்தியா' என்ற திட்டத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டத்தின் மூலம், திறமையான இந்திய பணியாளர்களுக்கான விசா எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் இது. இந்தியாவின் ஆற்றலும், ஜெர்மனியின் துல்லியமும் சந்திக்கும் போது, ஜெர்மனியின் பொறியியலும் மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்புகளும் சந்திக்கும் போது, ஜெர்மனியின் தொழில்நுட்பமும் மற்றும் இந்தியாவின் திறமையும் சந்திக்கும் போது - அது இந்தோ-பசிபிக் உட்பட உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்கிறது. இந்தியா-ஜெர்மனி இடையேயான நட்பு ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு முனையிலும் ஆழமடைந்து வருகிறது.
திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கான கருவிகள். அவற்றை இயக்குவதற்கான வலுவான சக்தி இந்தியாவிடம் உள்ளது. இந்தியா எதிர்கால உலகின் தேவைகளைக் கருத்தில் கொண்டு வேலை செய்கிறது” என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், “பொருளாதார வெற்றிக்கு உண்மையான, உள்ளடக்கிய ஜனநாயகம் மிகவும் முக்கியமானது என்று பொருளாதார நிபுணர் சைமன் ஜான்சன் சமீபத்திய பேட்டியில் கூறினார். உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களாக ஜெர்மனியும் இந்தியாவும் திகழ்கின்றன. உலகமயமாக்கல் நமது நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய வெற்றிக் கதையாக இருந்து வருகிறது" என தெரிவித்தார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்தியா மற்றும் ஜெர்மனியைப் போல நண்பர்களும் நட்பு நாடுகளும் உலகிற்குத் தேவை. அன்புள்ள நரேந்திர மோடி, புதுடெல்லியில் உங்கள் அன்பான வரவேற்புக்கு நன்றி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT