Published : 25 Oct 2024 02:14 PM
Last Updated : 25 Oct 2024 02:14 PM
புதுடெல்லி: லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயின் தலைக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்துள்ளது. தற்போது அவர் கனடாவில் வசிப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அன்மோல் மீது இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தது. மும்பையில் தற்போது நடந்து வரும் விசாரணையில் குறிப்பாக அரசியல் கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக அவரின் பெயர் மீண்டும் கவனம் பெற்றது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகவும் அவர் தேடப்பட்டு வருகிறார். அன்மோல் பிஷ்னோய் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அதனைத் தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய அன்மோல், ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். அன்மோலின் கைது மூலம் பிராந்தியம் முழுவதுமுள்ள சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பரந்த நெட்வொர்க்குகள் பற்றிய பல தகவல்கள் தெரியவரலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) மற்றும் லாரன்ஸ் பிஷ்னோயின் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் குழு தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் என்ஐஏ நடத்திய சோதனைகளில் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிப்பொருட்கள்,குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் பொருட்கள் மற்றும் பணங்களை கைப்பற்றிய 9 மாதங்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட 32 இடங்களில் ஜனவரியில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், இரண்டு பிஸ்டல்கள், இரண்டு மேகஸின்கள், வெடிபொருள்கள் மற்றும் ரூ.4.60 லட்சம் கைப்பற்றப்பட்டது.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி பிரார் உள்ளிட்ட அவரின் கூட்டாளிகளின் வழிகாட்டுதலின் படி நடத்தப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ், பதிவு செய்யப்பட்டது தொடர்பாக என்ஐஏ ஏழு இடங்களில் சோதனை நடத்தியது. இந்த குழு அதன் மாஃபியா ஸ்டைல் குற்ற நெட்வொர்க்களை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளிலும் பரப்புகிறது.
இந்த நெட்வொர்க்குகள் பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மற்றும் பிரதீப் குமார் போன்ற மத மற்றும் சமூக தலைவர்களின் கொலை உள்ளட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த குற்ற நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டுள்ளன. மேலும் தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்களில் மிரட்டி பெரிய அளவில் பணம் பறிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT