Published : 25 Oct 2024 04:25 AM
Last Updated : 25 Oct 2024 04:25 AM
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று முதல்வர் உமர் அப்துல்லாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அப்போது ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.
இந்த சூழலில் அண்மையில் நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாடு - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி காஷ்மீரின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
அதற்கு அடுத்த நாள் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் துணை நிலை ஆளுநர் வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அப்போது ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் அப்துல்லாடெல்லியில் நேற்று சந்தித்துப்பேசினார். அப்போது காஷ்மீருக்குமீண்டும் மாநில அந்தஸ்து கோரும் தீர்மானத்தை அவரிடம் வழங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைத்தபிறகு மாநில அரசுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் கிடைக்கும். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மாநில அரசே நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் முடியும். சட்டப்பேரவையில் நிதி மசோதாவை நிறைவேற்றினால் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெறத் தேவை இருக்காது.
யூனியன் பிரதேசம் என்பதால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையில 10 சதவீதம் பேரை மட்டுமே அமைச்சர்களாக நியமிக்க முடியும். மாநில அந்தஸ்து கிடைத்த பிறகு 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமிக்க முடியும்.
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதேநேரம் மத்திய அரசிடமும் முதல்வர் உமர் அப்துல்லா நேரடியாக வலியுறுத்தி உள்ளார். இவ்வாறு தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT